Breaking News

மீனவர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முடியும்! ஜனாதிபதி நம்பிக்கை

இந்திய, இலங்கை மீனவர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முடியுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு வருகைதந்துள்ள தமிழக மீனவர் சங்கப் பிரதிநிதிகள் சிலரை இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியபோது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது இரு நாட்டு மீனவர் பிரச்சினை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவும் நீண்டகால நட்புறவு எந்தவகையிலும் சீர்குலைவதற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். இரண்டு நாடுகளுக்கும் அநீதி ஏற்படாத வகையில் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி, இரு நாட்டு அதிகாரிகளுக்குமிடையே முன்னெடுக்கப்படுகின்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தும் மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைவதற்கு தமிழக மீனவர் சங்கங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 37 பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்வதற்கும் இதன்போது ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

தமிழக மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனும் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.