நேபாள நிலநடுக்கம்: உயிரிழப்பு 29 ஆக உயர்வு
நேபாளத்தில் இன்று மீண்டும் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கம் காரணமாக 29 பேர் பலியானதாக நேபாள உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். நேபாளத்தில் நண்பகல் வேளையில் 7.4 மற்றும் 6.2 என்ற ரிக்டர் அளவில் இரு வேறு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி முதல் நிலநடுக்கம் ரிக்டரில் 7.4ஆக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதன் மையம் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவார முகாமுக்கு அருகில் இருந்ததாக யு.எஸ்.ஜி.எஸ். தெரிவித்துள்ளது.
முதற்கட்ட தகவலின்படி, வீடுகள் இடிந்து வீழ்ந்து 4 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் சர்வதேச குடியேறுவோர் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. ஆனால் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்த அனைவருமே ஏற்கெனவே அதிக பாதிப்புகளை சந்தித்த சவுத்தாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.