Breaking News

அடுத்த மாதம் உள்நாட்டு போர்க்குற்ற விசாரணை ஆரம்பம் – ஜனாதிபதி

புதிய போர்க்குற்ற விசாரணை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“புதிய போர்க்குற்ற விசாரணை அனைத்துலக தரத்துடன் உள்நாட்டில் நடத்தப்படும். இதில் சுதந்திரமாகச் செயற்படுவதற்கு இலங்கைக்குஉரிமை உள்ளது. வரும் செப்ரெம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்துக்கு முன்னர் இந்த விசாரணைகள் நடைபெற வேண்டும்.

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின் போதும், ஐ.நா சிறப்புப் பிரதிநிதியிடமும், நான் அனைத்துலகத் தரம் வாய்ந்த உள்நாட்டு விசாரணையை நடத்துவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளேன். அடுத்த ஜெனிவா கூட்டத்தொடருக்கு முன்னதாக, இந்த விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும்.

உள்நாட்டு விசாரணையில் எவரேனும் குற்றவாளியாக காணப்பட்டால் அவர் மீது இங்குள்ள சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். ஐ.நா எமது நீதியின் தரத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறது. நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்காக, போரை நடத்தியவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் உறதிப்பாட்டைப் பேணவும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

ஆனால், பொறுப்புக்கூறும் விவகாரத்தில் எவரேனும் குற்றவாளியாக காணப்பட்டால், சட்டத்தின்படி அந்த விவகாரம் அணுகப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.