வடக்கு கிழக்கில் மீண்டும் வன்முறைகளை கட்டவிழ்த்து விட தீய சக்திகள் முயற்சி- விக்கிரமபாகு
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையானது மிகவும் கண்டிக்கத்தக்கது இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
இதேவேளை இந்த சம்பவத்தை அடிப் படையாக கொண்டு வடக்கு,கிழக்கில் மீண்டும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவதன் மூலம் அதனூடாக அரசியல் இலாபம் காண ஒரு சில சக்திகள் முயற்சிப்பதாகவும் இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நவசம சமாஜக் கட்சியின் தலைமை காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையானது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்தை கண்டித்தும் நீதி வேண்டியும் மக்கள் தொடர்ச்சியாக ஒற்றுமையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது மிகவும் வரவேற்கத்தக்கது.
இதனிடையே இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வடக்கு, கிழக்கில் ஒரு சில அடிப்படைவாத சக்திகள் மீண்டும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவதன் மூலம் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி அதனூடாக அரசியல் இலாபம் காண முயற்சிக்கின்றனர். எனவே இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
வட கிழக்கு பகுதியில் யுத்தத்தின் பின்னர் இன்று மக்களிடையே ஜனநாயகம் ஒன்று மலர்ந்துள்ளது. இவ்வாறான நிலையில் இது போன்ற சம்பவங்கள் எம்மை கவலையடைய செய்கின்றன. நல்லாட்சியின் கீழ் இவ்வாறான செயற் பாடுகளுக்கு எவ்வாறான சந்தர்ப்பத்திலும் அனுமதிக்க முடியாது. இச்சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றார்.