Breaking News

விடுதலைப் புலிகளை நினைவு கூர அனுமதிக்க முடியாது - அரசாங்கம்

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், விடுதலைப் புலிகளை நினைவு கூரும் எந்தவொரு முயற்சிக்கும் அனுமதி அளிக்கப்படாது என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள இலங்கையின் பொது நிர்வாக அமைச்சர் கரு ஜெயசூரிய, “தீவிரவாத அமைப்பான விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கு, எவருக்கேனும் அரசாங்கத்தினால் அனுமதி அளிக்கப்படாது.

நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஜனநாயக சுதந்திரச் சூழலை தவறாகப் பயன்படுத்த முனையும் சக்திகள், தீவிரவாதம் மீண்டும் தலையெடுக்கக் கூடும் என்று காண்பிக்க முனைகின்றன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்டப் போரில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூரும் வாரம் நேற்று முன்தினம் ஆரம்பமாகியுள்ளது. நேற்றுமுன்தினம் முள்ளிவாய்க்காலிலும், யாழ். பல்கலைக்கழகத்திலும், இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. இந்தநிலையில், முள்ளிவாய்க்காலில், விடுதலைப் புலிகளை நினைவு கூரும் நிகழ்வு இடம்பெற்றதான கொழும்பு ஆங்கில மற்றும் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதனையடுத்தே, அமைச்சர் கரு ஜெயசூரிய இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். எனினும், முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளை நினைவு கூரும் நிகழ்வு நடத்தப்படவில்லை என்றும், போரில் கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவு கூரும் நிகழ்வே நடத்தப்பட்டதாகவும், அந்த நிகழ்வில் கலந்து கொண்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.