Breaking News

வித்தியா படுகொலை விசாரணையை தடுக்க மஹிந்தவின் ஆயுதக்குழுக்கள் சூழ்ச்சி!

"புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் சரியான விசாரணை இடம்பெறாமல் தடுக்க சூழ்ச்சி இடம்பெறுகின்றது. 

இந்தச் சூழ்ச்சியின் பின்னணியில், யாழ். மாவட்டத்தில் தீவுப் பகுதிகளை முன்னர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஆயுதக்குழுக்கள் - முன்னைய மஹிந்த அரசுடன் சேர்ந்து இயங்கிய கட்சிகள் இருக்கின்றன.'' - இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரில் சுட்டிக்காடியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்றுமுன்தினம் வெளிக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினர். 

இந்தச் சந்திப்பில் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை, அதனால் வடக்கு, கிழக்கில் இடம்பெற்று வரும் போராட்டங்கள், மாணவி படுகொலையின்பின் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலும் அவர்கள் கலந்துரையாடினர். இந்தச் சந்திப்புக்குறித்து கருத்து தெரிவித்த சுமந்திரன் எம்.பி. மேலும் தெரிவித்ததாவது:- 

"முன்னைய மஹிந்த அரசுடன் இருந்த ஆயுதக்குழுக்கள் - கட்சிகள், புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையினால் ஏற்பட்டுள்ள அவலச் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பாவித்து, எதிர்ப்புப் போராட்டங்களை வன்முறையாக மாற்றுவதற்குச் சதிசெய்கின்றன. அது தெளிவாகத் தெரிகின்றது. 

மக்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற வேண்டும். இப்படியான படுகொலைகள் இடம்பெறும்போது எதிர்ப்புக்காட்டாமல் இருக்க முடியாது. மக்களின் இந்த உணர் வுமிக்க போராடங்களை எவரும் தடுக்கமுடியாது. மக்களுடன் நாமும் இணைந்து செயற்படுகின்றோம். ஆனால், மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் மக்கள் நடத்தும் நீதிக்கான போராட்டத்தை வன்முறையாக மாற்றி வழக்கைத் திசை திருப்புகின்ற சூழ்ச்சி நடைபெறுவது தெரிகின்றது. புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சந்தேக நபர்கள் 4 பேரினது வீடுகளைத் தீயிட்டு எரித்துள்ளனர். 

அந்த வீடுகளில் இருந்திருக்கக்கூடிய தடயப்பொருட்கள் இதனூடாக அழிக்கப்பட்டிருக்கும்-எரிக்கப்பட் டிருக்கும். இனி அவற்றை எடுக்க முடியாது. அதேவேளை, யாழ்.நீதிமன்றத்தின் கட்டடத் தொகுதிகள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி ஆயுதக்குழுக்களே இவ்வாறு வன்முறையைத் தூண்டி, சரியான விசாரணையை நடத்தவிடாமல் தடுப்பதற்கு சில சூழ்ச்சிகள் முன்னெடுக்கின்றன. இதனை பிரதமருக்கு தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளோம்" - என்றார் சுமந்திரன் எம்.பி.