Breaking News

குற்றமிழைக்காத அப்பாவிகளை உடன் விடுவியுங்கள்! ரணிலிடம் மாவை வேண்டுகோள்

"புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படு கொலைக்கு நீதி கோரி யாழ்.நகரில் நடைபெற்ற போராட்டத்தின்போது யாழ்.நீதிமன்றக் கடட்டத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்டனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட 130 பேரும் அநுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

அவர்களில் குற்றமிழைக்காத அப்பாவிகள் பலர் உள்ளனர். எனவே, அவர்களை விடுதலை செய்யவேண்டும்." - இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தாம் வலியுறுத்தியுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிரா கூறினார். நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்றுமுன்தினம் வெளிக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினர். 

இந்தச் சந்திப்பிலேயே தாம் மேற்படி விடயத்தை எடுத்துரைத்தோம் என்று மாவை எம்.பி. கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "யாழ்.நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீதான தாக்குதல் தொடர்பில் கைதானவர்களில் பாடசாலை மாணவர்கள் 20 பேருக்கு மேல் உள்ளனர். எனவே, அவர்கள் தமது கல்வியைத் தொடர முன்னுரிமை அடிப்படையில் உடன் விடுதலை செய்யுமாறும் பிரதமரிடம் கேட்டுக்கொண்டோம். 

யாழ்.நீதிமன்றக் கட்டடத்தொகுதி மீதான தாக்குதல் தொடர்பில் உண்மையான குற்றவாளிகள் தப்பித்திருப்பார்கள். எனவே, முறையான விசாரணையை நடத்தி குற்றமிழைக்காத அப்பாவிகளை பிணையிலாவது விடுதலை செய்யவேண்டும் என்றும் பிரதமரிடம் நாம் வலியுறுத்தினோம். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் சந்தேகநபர்களை தடுத்துவைக்கும் அளவுக்கு இடம் போதாமை என்ற காரணத்தைக்காட்டி யாழ்.நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீதான தாக்குதல் தொடர்பில் கைதான 130 பேரும் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். 

இதனால் அவர்களை உறவினர்கள் பார்வையிட பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்றும் பிரதமரிடம் நாம் சுட்டிக்காட்டினோம். அநுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 130 பேரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் நேரில் சென்று பார்வையிடவுள்ளனர்" - என்று தெரிவித்தார் மாவை எம்.பி.