மே இறுதிப் பகுதிக்கு தள்ளிப் போகிறது நாடாளுமன்றக் கலைப்பு
இலங்கை நாடாளுமன்றம், இந்த மாத இறு தியிலேயே கலைக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக, எதிர் வரும் 20ம்திகதி நாடாளுமன்றம் கலைக் கப்படும் என எதிர்வு கூறப்பட்டது.
ஆனால், மேலும் ஒரு வாரம் கழித்து, எதிர்வரும் 27 ஆம் நாள் அளவிலேயே நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்று இலங்கை அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தேர்தல் முறை மாற்றம் தொடர்பான, 20வது திருத்தச் சட்டமூலத்தின் இறுதி வரைவு இதுவரை தயாராகாத நிலையிலேயே நாடாளுமன்றக் கலைப்பு தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் முறை மாற்றம் தொடர்பான சட்டமூலம் எதிர்வரும் 20 ஆம் நாள் அமைச்சரவை உப குழுவினால், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதும் அது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
அதையடுத்து, இம்மாத இறுதியில் தேர்தல் முறை மாற்றம் குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பின்னர், நாடாளுமன்றத்தைக் கலைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.