நல்லாட்சி என்ற பெயரில் வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகை தருவது அச்சமாகவுள்ளது
நல்லாட்சி என்ற பெயரில் வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகை தருவது எமக்கு பெரும் அச்சமாக உள்ளது. சுதந்திர ஊடக செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேசம் தலையிட வேண்டியதில்லை என எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
சுதந்திர ஊடக செயற்பாட்டிற்கு சீர்திருத்தம் அவசியமாகும். எனினும் குறித்த சீர்திருத்தத்தில் எமது நாட்டவர்களின் அனுபவங்களையே உள்ளடக்க வேண்டும். அதனை விடுத்து சர்வதேசத்தின் மாதிரி எமக்கு தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கை மன்றக் கல்லூரியில் வெகுசன ஊடகங்கள் தொடர்பான சீர்திருத்தம் தொடர்பிலான தேசிய மாநாட்டின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வெகுசன ஊடகங்கள் தொடர்பில் சீர்திருத்தம் மிகவும் அவசியமாகும். அதன்பிரகாரமே புதிய ஊடக கலாசாரத்தை கட்டியெழுப்ப முடியும். அரசியல் வாதிகள் ஊடகங்களை அடிமைப்படுத்த முனைகின்றனர். அதேபோன்று ஊடகங்கள் அரசியல்வாதிகளை அடிமைப்படுத்த முனைகின்றன.
எனினும் நாட்டு மக்களே இந்த இரண்டையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஊடகங்களின் கருத்தையும் ஏற்காது, அரிசியல்வாதிகளின் கருத்தையும் ஏற்காது மக்கள் புத்திசாலித்தனமாக வாக்களித்து தமக்கு விருப்பமான தலைவர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.
இந்நிலையில் அரச ஊடகங்கள் மாத்திரமின்றி தனியார் ஊடகங்களும் ஒழுக்கவியல் கோட்பாட்டின்படி செயற்படவேண்டும். இதேவேளை சுதந்திர ஊடக செயற்பாட்டிற்கு சீர்திருத்தம் அவசியமாகும். எனினும் குறித்த சீர்திருத்தத்தில் எமது நாட்டவர்களின் அனுபவங்களையே உள்ளடக்க வேண்டும். அதனை விடுத்து சர்வதேசத்தின் மாதிரி எமக்கு தேவையில்லை.
நல்லாட்சி என்ற பெயரில் வெளிநாட்ட வர்கள் இலங்கைக்கு வருகை தருவது எமக்கு பெரும் அச்சமாக உள்ளது. சுதந்திர ஊடக செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேசம் தலையிட வேண்டியதில்லை.