தேர்தல் முறை குறித்து இன்று இறுதித் தீர்மானம்
தேர்தல் முறை மாற்ற விடயத்தில் எவ்வாறான புதிய தேர்தல் முறைக்கு செல்வது என்பது தொடர்பில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைசருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள தேர்தல் மாதிரியுடன் புதன்கிழமை நண்பகல் 12 மணிவரை கிடைக்கவுள்ள அரசியல் கட்சிகளின் யோசனைகளையும் ஆராய்ந்து புதிய தேர் தல் முறையை அமைச்சரவைக் கூட்டத்தின்போது தீர்மானிக்கவுள் ளோம் என்றும் அமைச்சர் குறிப்பிட் டார்.
தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் கேசரிக்கு தகவல் வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். அமைச்சர் ராஜித சேனாரட்ன இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்
தேர்தல் முறை மாற்றம் தொடர் பில் சகல அரசியல் கட்சிகளிடமும் இன்று (புதன்கிழமை) நண்பகலுக்கு முன்பதாக யோசனைகளை சமர்ப் பிக்குமாறு கோரப்பட்டுள்ளது. அந்த வகையில் தேர்தல் முறை மாற்றம் குறித்த கட்சிகளின் யோசனைகள் கிடைத்ததும் அவற்றைக்கொண்டு எவ்வாறான தேர்தல் முறைக்கு செல்வது என்பது குறித்து தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளோம். அதாவது எவ்வாறான மற்றும் என்ன கட்ட மைப்பைக் கொண்ட தேர்தல் முறைக்கு செல்வது என்பது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தின்போது தீர்மானித்துவிடுவோம்.
அதன் பின்னர் தேர்தல் முறைமை தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். தேர்தல் முறைமையை மாற்றியமைத்துவிட்டே அடுத்த பாராளுமன்றத் தேர்தலை நாங்கள் நடத்துவோம். அந்த செயற்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இந்த செயற்பாட்டை நாங்கள் நிச்சயமாக செய்து முடிப்போம் என்றார்.
புதிய தேர்தல் முறை தொடர்பில் ஏற்கனவே ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு மேலும் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளவேண்டும் என சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையிலேயே இன்று புதன்கிழமை பகல் வரை அரசியல் கட்சிகளின் யோசனைகளை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்று நண்பகல் வரை கிடைக்கப்பெறும் அரசியல் கட்சிகளின் யோசனைகளைக்கொண்டு இறுதி வரைபை தயாரித்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தற்போது இரண்டு முறைமைகள் குறித்து பரிசீலிக்கபபட்டு வருகின்றது. முதலாவது யோசனை மாதிரியானது 196 உறுப்பினர்களை மாவட்ட ரீதியில் தெரிவு செய்யவும் 59 உறுப்பினர்களை தேசிய பட்டியல் ரீதியில் தெரிவு செய்யும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது விருப்பு வாக்கு முறைமை முற்றாக நீக்கப்படுகின்ற அதேவேளை விகிதாசார முறைமை நீக்கப்படாத முறையாக இது காணப்படுகின்றது. இதன்மூலம் தற்போது 225 ஆக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 255 ஆக உயர்த்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது
இதேவேளை மற்றுமொரு தேர்தல் முறைமையும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது தேர்தல் தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 165 உறுப்பினர்கள், விகிதாசார முறைமையின் பிரகாரம் 90 உறுப்பினர்கள் என்று பகிர்ந்து செல்லும்படி 255 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. விகிதாசார முறைப்படி தெரிவு செய்யப்படும் 90 உறுப்பினர்களை பொறுத்தமட்டில் 66 உறுப்பினர்கள் மாவட்ட ரீதியிலும் 24 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் ரீதியிலும் தெரிவு செய்யப்படும் வகையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் முதலாவது முறைப்படியே தேர்தல் முறையை மாற்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. காரணம் இந்த முறைமையின் ஊடாக தற்போதைய பாராளுமன்றத்தில் அரசியல் கட்சிகளுக்கு காணப்படுகின்ற பிரதிநிதித்துவங்களையொத்த பிரதிநிதித்துவங்களே புதிய பாராளுமன்றத்திலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும் சிறுபான்மை கட்சிகள் தேர்தல் முறை மாற்றம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து தொடர்ந்து ஆராய்ந்துவருகின்றன. அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடததியிருந்த சிறுபான்மை மற்றும் சிறு அரசியல் கட்சிகள் தேர்தல் முறை மாற்ற விடயத்தில் தமது பிரச்சினையை விளக்கியிருந்தன. இதன்போது எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலானது தற்போதைய விகிதாசார முறையிலேயே நடைபெறும் என்று ஜனாதிபதி உறுதியளித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் தேர்தல் முறையை மாற்றுவதற்கான ஏற்பாடுகளை தற்போது மேற்கொள்ள முடியும் என்றும் எனினும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலானது தற்போதைய தேர்தல் முறைமையின் அடிப்படையிலேயே நடைபெறவேண்டும் என்று வலியுறுத்திவருகின்றன.
ஆனால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைக்கொண்டுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது தேர்தல் முறை மாற்றம் உள்ளடங்கியுள்ள 100 நாள் திட்டம் முழுமையடையாமல் பாராளுமன்றத்தை கலைக்க இடமளிக்கமாட்டோம் என்று வலியுறுத்திவருகின்றது. இதேவேளை தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் நேற்று முன்தினம் பிரதி வெிளிவிவகார அமைச்சர் குறிப்பிடுகையில்
தேர்தல் முறைமையில் பிரதான இரு கட்சிகளிடையே இணக்கப்பாடு ஏற்படாவிடின் உடனடியாக பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டும். அதேபோல் சிறுபான்மை கட்சிகளின் தீர்மானத்திலும் அதிக அக்கறை செலுத்தப்படும். இனிவரும் காலங்களில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தேசியப்பட்டியலில் தெரிவாவோரில் 50வீதத்தை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.