Breaking News

கட்சிக்காக தம்மை விட அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர் எவருமில்லை என ஜனாதிபதி தெரிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காக தம்மைப் போன்று அர்ப்பணிப்புகளை செய்த வேறு எவரும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மொனராகலை மாவட்ட சம்மேளனத்தில் இன்று முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். கட்சிக்காக தம்மை விட அர்ப்பணிப்புகளை செய்த வேறு எவரும் இருந்தால் கூறுமாறும் ஜனாதிபதி இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதரந்திரக் கட்சி தமது கட்சி என தெரிவித்த ஜனாதிபதி, அந்தக் கட்சி பிளவுபடுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சிக்காலத்தில் 12 வருடங்களாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இக்கட்டை எதிர்நோக்கியதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, இதன்போது கட்சிக்காகப் போராடிய தாம் மூன்று தடவைகள் சிறையிடப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை வெற்றியை நோக்கி இட்டுச் செல்வதைப் போன்றே கட்சியை வெற்றிப் பாதையில் வழிநடத்தும் பொறுப்பும் தமக்குள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.