யாழ்ப்பாணத்தில் சட்டமும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் – டி.எம். சுவாமிநாதன்
யாழ்ப்பாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை யைக் கருத்திற்கொண்டு பாதுகாப்பை உறுதி செய்வதுடன், சட்டமும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டுமென மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை கண்டிக்கத்தக்க விடயமாகும் எனவும், நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வண்ணம் பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் மீள்குடியேற்ற அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வித்தியாவின் கொலையுடன் சம்பந்தப்பட்ட சகலரும் பாரபட்சமின்றி, அழுத்தங்களுக்கு அடிபணியாது சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், இந்த விடயத்தில் மக்கள் பொறுமையைக் கடைப்பிடித்து வன்முறைகளில் ஈடுபடாமல் பாதுகாப்புத் தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் மீள்குடியேற்ற அமைச்சர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.