ஜெ.யின் எதிர்கால அரசியல் வாழ்க்கையை நிர்ணயிக்கும் தீர்ப்பு இன்று!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான, சொத்துக் குவிப்பு மேன்முறையீட்டின் மீதான தீர்ப்பு இன்று வெளியாகிறது. இவ்வழக்கின் முடிவு என்னவாக இருக்கும் என, அரசியல் வட்டாரங்களில் பலத்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
வருமானத்துக்கு அதிகமாக, 66 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது, வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கில், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் இணைக்கப்பட்டனர். வழக்கை விசாரணை செய்த பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா, குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா உட்பட நால்வருக்கும் தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.
அபராதமாக ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாயும், மற்ற மூவருக்கும், தலா 10 கோடி ரூபாயும் விதித்தார். இதையடுத்து, நால்வரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, பிணையில் வெளியே வந்தனர். சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து, ஜெயலலிதா உள்ளிட்ட, நால்வரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு தாக்கல் செய்தனர்.
இவ் வழக்கு விசாரணைகள் மூன்று மாதங்களாக நீதிபதி குமாரசாமியின் முன்னிலையில் நடைபெற்றன. மே 12 ஆம் திகதிக்குள், இவ்வழக்கில் தீர்ப்பு வழங்க, உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்திருந்தது. அதன்படி இன்று 11ஆம் திகதி முற்பகல் 11 மணிக்கு நீதிபதி குமாரசாமி, மேன்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்குகிறார். இந்த தீர்ப்பு, ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போவதாக அமையும்.
ஊழல் வழக்கில், குறைந்தபட்சம் ஓராண்டு முதல், ஏழாண்டுகள் வரை, சிறை தண்டனை விதிக்க, சட்டத்தில் இடம் உள்ளது. ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை, பெங்களூர் தனி நீதிமன்றம் விதித்தது. பொதுவாக, மேன்முறையீட்டு வழக்கில், என்னென்ன வாய்ப்புகள் உள்ளனவென்றால்,
* குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றால், விடுதலையாவர்.
* நிரூபணமானால், கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை, உயர் நீதிமன்றம் உறுதிசெய்யும்.
* அபராதம், சிறைத்தண்டனை அதிகபட்சம் என, உயர் நீதிமன்றம் கருதினால், தண்டனையையும், அபராதத்தையும் குறைக்கலாம்.
* தீர்ப்பு வழங்கும் நாளில், உயர் நீதிமன்றத்தில், குற்றவாளிகள் ஆஜராகத் தேவையில்லை.
* கீழமை நீதிமன்றங்களில்தான், தீர்ப்பு வழங்கும் திகதியில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராக வேண்டும். உயர் நீதிமன்றத்தில், அப்படி ஒரு நடைமுறை இல்லை.
* தண்டனை உறுதி செய்யப்பட்டாலோ, குறைக்கப்பட்டாலோ, குறிப்பிட்ட நாட்களுக்குள், தனி நீதிமன்றத்தில் சரணடையும்படி, குற்றவாளிகளுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிடும்.
* உயர் நீதிமன்றம் குறிப்பிடும் நாட்களுக்குள், குற்றவாளிகள் சரணடைந்து, சிறைக்கு செல்ல வேண்டும். பின், உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்து பிணையில் வெளிவர வேண்டும்.
* ஊழல் வழக்கில் ஒருவருக்கு சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்பட்டால் கூட, அவர், தேர்தலில் போட்டியிடும் தகுதியை, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு இழக்கிறார். வெறும் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டால், அபராதத் தொகையை செலுத்திய நாளில் இருந்து, ஆறு ஆண்டுகள் வரை, தேர்தலில் போட்டியிட முடியாது. சிறை தண்டனை விதிக்கப்பட்டால், சிறை தண்டனையை அனுபவித்த பின், ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.
உதாரணத்துக்கு, ஊழல் வழக்கில் ஒருவருக்கு, ஓராண்டு சிறை விதிக்கப்பட்டால், அந்த ஓராண்டு சிறை வாசம், ஆறு ஆண்டுகள் என, மொத்தம், ஏழு ஆண்டுகள், தேர்தலில் போட்டியிட முடியாது. ஊழல் வழக்கில், பொது ஊழியர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றால், அவர் மட்டும் விடுதலையாவதற்கு வாய்ப்புகள் இருப்பதை மறுப்பதற்கில்லை எனவும், சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். பொது ஊழியர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல், உடந்தையாக, தூண்டுதலாக இருப்பவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மட்டும், தண்டனை விதிக்க முடியும் என, வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்திய அரசியலில், முதன் முதலாக, முதல்வராக பதவி வகிக்கும் போது, குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டவர் என்பதால், இவ்வழக்கின் தீர்ப்பை, அரசியல் வட்டாரமே எதிர்பார்த்து உள்ளது.
இவ்வழக்கின் தீர்ப்பு, தமிழக அரசியலில், பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், அனைத்து தரப்பினரும், தீர்ப்பை ஆவலுடன் எதிர்நோக்கியபடி உள்ளனர். ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதலையானால் மட்டுமே, நமக்கு எதிர்காலம் உண்டு என நினைக்கும், அ.தி.மு.க.,நிர்வாகிகள், அவர் விடுதலையாக வேண்டும் என, வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.