அன்று கசப்பாக இருந்த ஜெனிவா இன்று இனிப்பாகிவிட்டது - அநுர
மஹிந்த ராஜபக்ஷ, பந்துல குணவர்த்தன, விமல் வீரவன்ஸ ஆகியோருக்கு அன்று கசப்பாகக் காணப்பட்ட ஜெனீவா இன்று இனிப்பாக மாறி விட்டது என்பது வேடிக்கையாகவுள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸா நாயக்க எம்.பி. தெரிவித்தார்.
மேலும் திருடர்களை பாதுகாப்பது சர்வதேச பாராளுமன்ற சங்கத்தின் கடமையல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக ஜே.வி.பி. யின் தலைவரும் எம்.பி.யுமான அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் ஜெனீவா என்ற வார்த்தையை கூறுகையில்,
மஹிந்த ராஜபக்ஷ, பந்துல குணவர்த்தன, விமல் வீரவன்ஸ கூட்டணிக்கு கசக்கும். ஜெனீவா என்றாலே அது தடை செய்யப்பட்ட வார்த்தையாக இருந்தது. இன்று அது அவர்களுக்கு இனிப்பாக மாறியுள்ளது. சர்வதேச பாராளுமன்ற சங்கமானது பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் மறுக்கப்படும் போதும் அவர்கள் தாக்கப்படும்போதும் அவர்களுக்காக குரல் கொடுக்கும் எம்.பி.க்களின் உரிமைகளை பாதுகாக்கும் சங்கமாகும்.
அதுதான் அச் சங்கத்தின் கடமையாகும். அதைவிடுத்து ஊழல் மோசடிகளில் ஈடுபடும் திருட்டு எம்.பி.க்களைப் பாதுகாப் பது இச் சங்கத்தின் கடமையல்ல. எமது நாட்டில் முன்னைய காலங்களில் பயங்கரவாத தடுப்பு பிரிவு, போதைவஸ்து தடுப்பு பிரிவுகள் இயங்கவில்லை. ஆனால் காலப்போக்கில் நாட்டில் பயங்கரவாத போதைப்பொருள் பிரச்சினைகள் தலைதூக்கும் போது மேற்கண்ட விசேட பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதேபோன்று தான் பாரிய ஊழல் மோசடிகளை ஆராய விசேட நிதிக்குற்றவியல் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் அநுர திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.