Breaking News

பொட்டு அம்மானின் இறுதி நேர உரையாடலை விற்கும் முன்னாள் இராணுவத்தினர்

2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 03ம் திகதி ஆனந்தபுரத்தில் இடம்பெற்ற பாரிய சண்டை குறித்து நாம் அனைவரும் அறிந்ததொன்றாகும்.

அங்கு ஆயிரக்கணக்கான விடுதலைப் புலிகள் வீர மரணத்தை தழுவிக்கொண்டார்கள். புலிகளின் மகளீர் அணி படைத்தளபதியாக செயற்பட்ட விதுஷா , முள்ளிவாய்க்காலில் இருந்த பொட்டு அம்மானோடு கடந்த 2009ம் ஆண்டு ஏப்ரல் 3ம் திகதி கலந்துரையாடியுள்ளார்.

வாக்கிடோக்கியில் நடந்த இந்த உரையாடலை இராணுவத்தினர் ஒட்டுக்கேட்டுள்ளனர். இது தொடர்பிலான விரிவான தகவல்களை சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ளது. அந்த உரையாடல் அடங்கிய ஒலி நாடா தம்மிடம் உள்ளதாகவும், அதனை சிங்கப்பூர் பணத்தில் 5,000 வெள்ளிக்கு விற்பனை செய்யப்போவதாகவும் இராணுவத்திலிருந்து தப்பி சென்ற சிலர் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளிலுள்ள சில ஊடகவியலாளர்களை தொடர்பு கொண்டு இந்த உரையாடலை விற்பது தொடர்பில் பேரம் பேசியுள்ளனர். ஆனந்தபுரத்தில் தீவிர மோதல்கள் இடம்பெற்ற போது, புலிகளிடம் உணவு, குடி நீர் மற்றும் ஆயுதங்கள் போதியளவு இன்மையால் விதுஷா,பொட்டு அம்மானை தொடர்புகொண்டு அவசரமாக அவற்றை அனுப்புமாறு கோரியுள்ளார்.

ஆனால் பொட்டு அம்மானால் குறித்த சந்தரப்பத்தில் எதனையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சகல வழிகளும் அடைக்கப்பட்டு விட்ட நிலையில், மிகவும் விரக்தியடைந்த நிலையிலிருந்த பொட்டு அம்மான், “தனது அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததாகவும், தன்னால் அத்தடைகளை தகர்த்தெறிந்துவிட்டு நீங்கள் இருக்கும் இடத்திற்கு வரமுடியவில்லை” எனவும் தழு தழுத்த குரலில் தெரிவித்துள்ளார்.

இவை அனைத்தும் தெளிவாக பதிவாகியுள்ளது என குறித்த இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இதுவே புலிகளின் புலனாய்வுப்பிரிவின் பொறுப்பாளர் பொட்டு அம்மானின் இறுதி வாக்கிடோக்கி உரையாடல் என தெரிவிக்கப்படுகிறது. அதற்கு பின்னர் அவர் பெரிதாக எவருடனும் வாக்கியில் உரையாடவில்லை என தெரியவருகின்றது.

இதற்கு முன்னர் யுத்த குற்றச்சாட்டுக்கள் அடங்கிய ஒளிநாடாக்கள் இராணுவத்தினரால் விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அவர்கள் ஒலிநாடாக்களையும் விற்பனை செய்வதற்கு முயற்சித்து வருகின்றமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.