Breaking News

கொழும்பில் சீன நீர்மூழ்கிகள் – பதிலளிக்க மறுத்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர்

கொழும்புத் துறைமுகத்தில் சீன நீர்மூழ்கிகள் தரித்துச் சென்ற விவகாரம் தொடர்பாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பிரதிப் பேச்சாளர், ஜெப் ரத்கே, கருத்து எதையும் வெளியிட மறுத்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஜோன் கெரியின் சிறிலங்கா பயணத்தின் போது, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியமான பிராந்திய விவகாரங்கள் குறித்துப் பேசப்பட்டதை சுட்டிக்காட்டி, அதுகுறித்தும், பேசப்பட்ட விடயங்கள் குறித்தும், செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பிரதிப் பேச்சாளர், ஜெப் ரத்கே, “கடல்சார் பாதுகாப்புக்கு இந்தோ-பசுபிக் பிராந்திய நாடுகளுக்கு அமெரிக்கா உதவிகளை வழங்குகிறது. கடற்கொள்ளை முறியடிப்பு, ஆட்கடத்தில் முறியடிப்பு நடவடிக்கை, மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த மீட்பு நடவடிக்கைகள் போன்றவை அதில் அடங்கும்.

கடல்சார் பாதுகாப்புக்கு இலங்கை பங்களிக்க மேற்கொள்ளும் முயற்சிக்கும், இந்தா- பசுபிக் பிராந்தியத்தில் முன்னணி கடல்சார் நாடான இலங்கை அதன் முக்கிய பங்கை நிறைவேற்றுவதற்கும் நாம் ஆதரவளிக்கிறோம்.” என்று குறிப்பிட்டார். இதையடுத்து, ஜோன் கெரி, குறிப்பாக இந்தியப் பெருங்கடல் விவகாரம் குறித்து கலந்துரையாடினாரா அல்லது, தென்சீனக்கடல் அல்லது ஏனைய பெருங்கடல் விவகாரங்கள் குறித்துப் பேசினாரா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பிரதிப் பேச்சாளர், ஜெப் ரத்கே, பதிலளிக்கையில், “ஜோன் கெரியின் கருத்துக்களின் அடிப்படையில், அவர் இந்தியப் பெருங்கடலில், எமது நண்பர்கள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள கூட்டாளிகளுடனான அமெரிக்காவின் தலைமையிலான கடல்சார் பாதுகாப்புக் குறித்தே பேசியிருக்கிறார்.

இலங்கையும் அமெரிக்காவும், அச்சுறுத்தலுக்கு எதிராகவும், பிராந்திய அல்லது கடல்சார் பகுதிகளை பலாத்காரமாக பயன்படுத்துவதற்கு எதிராகவும், இணைந்து பணியாற்றுகின்றன. பெரிய நாடுகள் சிறிய நாடுகள் என்றில்லாமல் எல்லா நாடுகளுக்கும், சட்டரீதியாக கடல் மற்றும் வானத்தைப் பயன்படுத்தும் உரிமையைக் கொண்டுள்ளன என்ற அடிப்படையில், நாம் இணைந்து பணியாற்றுகிறோம்.” என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து, கொழும்புத் துறைமுகத்தில் கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம், சீன நீர்மூழ்கிகள் தரித்து நின்றதைச் சுட்டிக்காட்டி, சீனாவின் இத்தகைய முயற்சிகள், குறித்து கவலை கொள்கிறீர்களா என்று செயதியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பதில் பிரதிப் பேச்சாளர், அதுகுறித்து எந்த குறிப்பிட்ட கருத்தும் தன்னிடம் இல்லை என்று கூறி நழுவிவிட்டார்.