தேர்தலின் பின்னர் ரணில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர தயாராக வேண்டும்
பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அடுத்த அரசாங்கம் ஐக்கிய மக்கள் தேசியக் கூட்டணியின் தனித்த அரசாங்கமாகவே உருவாகும். மீண்டும் ரணில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்வதற்கு தயாராக வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் அனுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே உண்மையான சர்வாதிகாரி. மக்களின் ஆதரவில்லாது சர்வாதிகார ஆட்சியை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தி தமக்கு சவால் விடுக்க முடியாத கட்சியாக மாற்றியமைக்க ஐக்கிய தேசியக் கட்சி
முயற்சிக்கின்றனது. ஆனால் அவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை. யார் என்ன முயற்சிகள் மேற்கொண்டாலும் நாம் பலமானதொரு கட்சியாகவே செயற்பட்டு வருகின்றோம். அடுத்த பொதுத் தேர்தலில் கூட்டு அரசாங்கம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. பொதுத் தேர்தலின் பின்னர் எமது தனி அரசாங்கம் அமையும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஆகியோரை ஒன்றிணைத்து எமது கூட்டுக் கட்சிகளின் உதவியுடன் நாம் மீண்டும் மக்கள் ஆட்சியை உருவாக்குவோம். நாம் கடந்த காலங்களில் ஒருசில தவறுகள் விட்டிருந்தோம். எனவே நாம் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு மக்கள் விருப்பும் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்துவோம்.
மேலும் மத்திய வங்கி ஆளுநரின் நிதி மோசடிகள் தொடர்பில் நாம் பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பிவந்த நிலையில் பிரதமர் அவற்றை மழுப்பும் பதில்களினூடாக சமாளித்து வருகின்றார். ஆனால் நம் இந்த விடயத்தை விடப்போவதில்லை. எமது ஆட்சியில் ஜனநாயகம் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் பலவற்றை முன்வைத்தே புதிய ஆட்சியை அமைத்தனர்.
ஆனால் இந்த ஆட்சியில் மிகவும் மோசமான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. ரணில் விக்கிரமசிங்கவே உண்மையான சர்வாதிகாரி. தமது சுயநலத்துக்காக சுயாதீன சேவைகள் அனைத்தும் முடக்கப்படுகின்றன. நாட்டில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்து விட்டன. மக்களுக்கு நோய்களையும் தீங்குகளையும் ஏற்படுத்தும் உணவுகள், மருந்துகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இவை தொடர்பில் கேள்வி எழுப்பும் நபர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். பதவி விலக்கப்படுகின்றனர். உண்மையான சர்வாதிகார பாசிச அரசாங்கம் இன்று ஆட்சியில் உள்ளது. விலை குறைப்பு செய்வதாக வாக்குறுதியளித்தனர், சட்டம் நிலைநாட்டப்படுவதாக தெரிவித்தனர், ஆனால் இவர்கள் கூறிய எதுவும் நடைபெறவில்லை. இவர்களின் நூறுநாள் வேலைத்திட்டம் வெறும் கண் துடைப்பு மட்டுமேயாகும்.
இந்த அரசாங்கம் எமது ஜனாதிபதியை பச்சை நிறமாக்கிவிட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படத்தையும் அவரது பெயரையும் வைத்துக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி செய்துகொண்டிருக்கின்றது. ஜனாதிபதி இல்லாமல் தனித்து செயற்பட முடியாது என்பதை நிரூபித்து வருகின்றனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மக்கள் பலத்துடன் ஆட்சி அமைத்திருந்தால் மக்கள் விருப்பம் என்னவென்பது தெரிந்திருக்கும். ஆனால் மக்கள் பலம் இல்லாது சட்டத்துக்கு முரணான வகையில் ஆட்சிக்கு வந்தவர்களுக்கு ஆட்சியை எப்படி கொண்டு நடத்துவது என்பது தெரியாது. எனவே இன்னும் சிறிது காலமே ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி இருக்கும். அதற்குப் பின்னர் மீண்டும் ரணில் எதிர்க்கட்சி தலைவராக செயற்படவேண்டிய நிலைமை ஏற்படும். அவருக்கான எதிர்க்கட்சி ஆசனத்தை தயார்படுத்தவேண்டிய நேரம் நெருங்கி விட்டது.
ரணிலின் ஆட்சியில் நாடு மிகவும் பயங்கரமானதொரு பாதையில் பயணித்துக்கொண்டு செல்கின்றது. பயங்கரவதத்தையும் பிரிவினைவாததையும் மீண்டும் பலப்படுத்தும் வகையில் இந்த ஆட்சியை கொண்டு செல்கின்றனர். இது நீடித்தால் இன்று நடக்கும் அசம்பாவிதங்கள் முழு நாட்டிலும் பரவி மக்களை அழித்துவிடும். நாட்டின் அமைதியும் கெட்டுவிடும். எனவே இந்த ஆட்சியை வெகு விரைவில் விரட்டியடிக்க நாம் தயாராகிவிட்டோம் என குறிப்பிட்டார்.