Breaking News

தேர்தல் சீர்திருத்தம் நடைமுறைக்கு வருமா? அமைச்சரவை இறுதி முடிவு இன்று

புதிய தேர்தல் முறையை உள்ளடக்கிய அரசியலமைப்பின் 20 வது திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது குறித்து இன்று புதன்கிமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கு அமைவாகத் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் இதுவரையில் அரசியல் கட்சிகளிடையே இணக்கப்பாடு எதுவும் ஏற்படாத நிலையில், இன்று அமைச்சரவை எடுக்கும் தீர்மானம் முக்கியமானதாக இருக்கும்.

தேர்தல் சீர்திருத்தத்துக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போதிருப்பதைப் போல 225 ஆக இருக்க வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தும் அதேவேளையில், இந்த எண்ணிக்கை 255 ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என மற்றொரு தரப்பினர் வலியுறுத்திவருகின்றார்கள்.

இந்த முரண்பாட்டுக்கு முடிவைக்காண முடியாத நிலையிலேயே இன்று அமைச்சரவையின் கூட்டத்தில் இவ்விடயம் கொண்டு செல்லப்படுகின்றது. இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இணக்கப்பாடு ஏற்படும் பட்சத்தில் தேர்தல் சீர்திருத்த யோசனைகள் விரைவாக பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.