வாழ்வில் வசந்தம் மலரவில்லை- முன்னாள் புலிகள்
முள்ளிவாயக்கால் இறுதிக் கட்ட போர் தற்போது பலராலும் நினைவு கொள்ளப்படுகின்றது. அந்த போரில் இராணுவத்திடம் சரண் அடைந்து புனர்வாழ்வு பெற்றிருந்த கிழக்கு மாகாணத்தை சேர்ந்தமுன்னாள் விடுதலைப்புலிகளை சந்தித்த போது அவர்களில் பலரும் தமக்கு உரிய உதவிகள் கிடைக்கவில்லை என்று கூறினர்.
போருக்கு பின்னரான மீள் குடியேற்றத்தின் நிமித்தம் இவாகளின் குடும்பங்களுக்கு பல்வேறு தன்னார்வ தொண்டர் அமைப்புகள் உதவிகளை வழங்கியிருந்தாலும் அது கூட எதிர்பார்த்த இலக்கை எட்ட வில்லை என கூறப்படுகின்றது.
புனர்வாழ்வு பெற்று விடுதலையான பின்னர் 16 சதவீத வட்டியில் ஒரு இலட்சம் ருபா வங்கி கடன் அரச வங்கிகள் ஊடாக சுய தொழில் துவங்க அளிக்கப்படுகிறது. இந்த கடனைப் பெற்றவர்கள் தங்களுடைய நாளாந்த செலவுகளை கட்டுப்படுத்தி மாதமொன்றுக்கு 1600 ருபா மீளச் செலுத்துவதாக முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரான கேசவப்பிள்ளை சிவராசா கூறுகின்றார். இந்த கடனை அரசாங்கம் தள்ளுபடி செய்யுமானால் அந்த சுமையிலிருந்து தங்களால் விடுபட முடியம் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்திய உதவி வீட்டுத் திட்ட பயனாளிகள் தெரிவில் முன்னாள் விடுதலைப்புலிகளின் குடும்பங்களுக்கும் வீடுகள் கிடைத்துள்ளன. வீடமைப்புக்குரிய உதவித் தொகை போதுமான தாக இல்லாத நிலையில் அதனை பூர்த்தி செயவது தொடர்பிலும் தாங்கள் நிதி நெருக்கடிகளுக்குள்ளாக வேண்டியிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.