ஆள் மாற்றமே இடம்பெற்றது ஆட்சி மாற்றம் இல்லை - கஜேந்திரகுமார்
ஆள் மாற்றமே தவிர ஆட்சி மாற்றம் இல்லை, இதனை இன்று நடைமுறையில் காண்கின்றோம் என்று தமிழ் தேசிய மக்கள் முண்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று (19) தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது யுத்த வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அது பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன என்று ஊடகவியலாளர்களினால் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், சிங்கள பௌத்த தேசிய வாதத்தின் வாக்கு வங்கியை நம்பியிருக்கின்ற ஒரு தரப்பு, தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தினைத் தோற்கடித்ததை மிகப்பெரிய வெற்றியாக காட்டிக் கொள்ளாமல் இருக்க முடியாதென்பதே யதார்த்தம்.
எம்மை பொறுத்தவரையில் எங்களுடைய தமிழ் மக்களை ஏதோ ஒரு வகையில், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லக்கூடியவர்களைப் பயன்படுத்தி ஏதோ ஒரு மாற்றம் வந்துள்ளது. சிந்தனையில் மாற்றம் வந்துள்ளது என எமது பிரதிநிதிகள் என்று சொல்லக்கூடியவர்கள் மக்களுக்கு கருத்துக்களைக் கூறுகின்றார்கள்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளை எடுத்து பார்த்தால், மகிந்த ராஜபக்ஷவின் அதே சிந்தனையில் தான் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். அதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.
வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் நல்லிணக்கம், இறந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தகூடியதாக கூறி, எமது தாயகத்தில் எதிர்க்கட்சியாக இருக்க கூடியதாக உள்ள தமிழ் தேசிய மக்கள் முண்னணியின் நினைவேந்தல் நினைவினை தடை செய்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சிகளின் நபர்கள் நினைவுகூற அனுமதிக்கின்றார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை முள்ளிவாய்க்காலில் பேசவில்லை. தலைமையின் கீழ் உள்ளவர்களே பேசினார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை பிரிவினை வாதத்தினை முறியடிச்ச தினம் அவற்றினை வரவேற்கின்றோம், அணுஷ்டிப்போம் என்று கூறுகின்றார்கள்.
ஆனால் அரசாங்கம் என்ன கூறுகின்றார்கள் என்றால், வெற்றி தினமாக கொண்டாடுகின்றார்கள். எனவே, எமது மக்கள் அவற்றினை புரிந்து கொண்டால், எதிர்காலத்தில் என்ன செய்ய முடியுமென்று முடிவெடுக்க முடியும் என்றார்.