அரசிலிருந்து அடுத்தவாரம் விலகுவோம்
உள்ளூராட்சி மன்றங்களை ஜனநாயக விரோதமான முறையில் விசேட ஆணையாளர்களின் கீழ் கொண்டுவந்துள்ளமை நல்லாட்சிக்கு ஏற்புடையதாக இல்லை. இந்த விடயத்தில் நாங்கள் அதிருப்தியுடன் இருக்கின்றோம். இது தொடர்பில் ஜனாதிபதி விளக்கமளிக்கவேண்டும்.
நியாயமான காரணங்கள் முன்வைக்கப்படாவிடின் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லையா? என்பதனை அடுத்த வாரமளவில் சுதந்திரக் கட்சி தீர்மானிக்கும் என்று கட்சியின் ஊடக பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.
நல்லாட்சியில் ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாடுகள் இடம்பெறக்கூடாது. உள்ளூராட்சி மன்றங்களுக்கு உடனடியாக தேர்தலை நடத்தலாம் அல்லது அவற்றின் ஆட்சிக்காலத்தை நீடித்திருக்கலாம். அதனைவிடுத்து ஆணையாளரின் கீழ் கொண்டுவருவது மக்களின் வாக்குரிமையை கேள்விக்குட்படுத்தும் செயற்பாடாகும். இதனை நல்லாட்சியில் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதனால் இந்த அரசா்ஙகத்தில் அமைச்சுப் பதவிகளை தொடர்ந்தும் வகிப்பதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிந்ததும் தேர்தலை நடத்தாமல் அதனை பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் கீழ் கொண்டுவருவதைப் போன்றே அரசாங்கத்தின் செயற்பாடு காணப்படுகின்றது. இதில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதிக்கத்துக்கு ஜனாதிபதி உட்பட்டுள்ளமை தெரிகின்றது. இது தொடர்பில் ஜனாதிபதி விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
நாட்டில் விரைவாக பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்றும் தேர்தல் முறைமை மாற்றப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுவருகின்ற நிலையில் சுதந்திரக் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டில் காணப்படும் 335 உள்ளுராட்சி மன்றங்களுள், உள்ளுராட்சி நிறுவனங்கள் 234 இன் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. மேலும் 65 உள்ளுராட்சி நிறுவனங்களின் பதவிக் காலம் 2015-07-31 ஆம் திகதி முடிவடைகின்றது. 21 உள்ளுராட்சி நிறுவனங்களின் பதவிக் காலம் 2015-10-16 ஆம் திகதி முடிவடைகின்றது. 2 உள்ளுராட்சி நிறுவனங்களின் பதவிக் காலம் 2015-10-31 ஆம் திகதி முடிவடைகின்றது. இந்நிலையில் பதவிக்காலம் முடிவடையும் உள்ளூராட்சிமன்றங்களை கலைத்துவிட்டு ஆணையாளரின் கீழ் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளமையை சுதந்திரக் கட்சி எதிர்த்துள்ளது.
அமைச்சர் டிலான் பெரெரா இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கம் என்பதன் காரணத்தினாலேயே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்துக்கு அமைய நாங்கள் அமைச்சரவையில் இணைந்துகொண்டோம். தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றோம். ஆனால் தற்போது நல்லாட்சிக்கு தொடர்பில்லாத ஜனநாயக விரோதமான செயற்பாடுகள் இடம்பெறுவதை உணர்கின்றோம்.
அதாவது நாட்டில் காணப்படுகின்ற உள்ளூராட்சிமன்றங்களின் பதவிக்காலம் முடிவடைந்தால் அவற்றுக்கு தேர்தலை நடத்தவேண்டும். உள்ளூராட்சிமன்றங்களுக்கு தமது பிரதிநிதிகளை அனுப்புவது மக்களின் உரிமையாகும். ஆனால் அரசாங்கம் மக்களின் இந்த ஜனநாயக உரிமைக்கு மதிப்பளிக்காமல் உள்ளூராட்சிமன்றங்களை விசேட ஆணையாளரின் கீழ் கொண்டுவருவது சிறந்த விடயமாக தெரியவில்லை.
உள்ளூராட்சிமன்றங்களை ஜனநாயக விரோதமான முறையில் விசேட ஆணையாளர்களின் கீழ் கொண்டுவந்துள்ளமை நல்லாட்சிக்கு ஏற்புடையதாக இல்லை. இது தொடர்பில் ஜனாதிபதி விளக்கமளிக்கவேண்டும். இல்லாவிடின் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லையா? என்பதனை அடுத்த வாரமளவில் சுதந்திரக் கட்சி தீர்மானிக்கவேண்டிய நிலை ஏற்படும்.
விசேடமாக இவ்வாறான அரசாங்கத்தில் தொடர்ந்து அமைச்சராக இருப்பதா? இல்லையா என்பதனை தீர்மானிக்கவேண்டிய நிலை ஏற்படலாம். உள்ளூராட்சிமன்றங்களுக்கு உடனடியாக தேர்தலை நடத்தலாம். அல்லது அவற்றின் ஆட்சிக்காலத்தை நீடித்திருக்கலாம். அதனைவிடுத்து ஆணையாளரின் கீழ் கொண்டுவருவது மக்களின் வாக்குரிமையை கேள்விக்குட்படுத்தும் செயற்பாடாகும். இதனை நல்லாட்சியில் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதனால்தான் இந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை தொடர்ந்தும் வகிப்பதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த விடயத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து நாங்கள் திருப்தியடைவில்லை. அதாவது பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிந்ததும் தேர்தலை நடத்தாமல் அதனை பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் கீழ் கொண்டுவருவதைப் போன்றே அரசாங்கத்தின் செயற்பாடு காணப்படுகின்றது. இதில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதிக்கத்துக்கு ஜனாதிபதி உட்பட்டுள்ளமை தெரிகின்றது. இது தொடர்பில் ஜனாதிபதி விளக்கம் அளிக்கவேண்டும். நியாயமான காரணங்கள் முன்வைக்கப்படாவிடின் நாம் அரசாங்கத்தில் இருப்பதா? இல்லையா என்ற தீர்மானத்தை எடுக்கவேண்டிய நிலை ஏற்படலாம்.
உள்ளூராட்சிமன்ற விடயத்தில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதிக்கம் இருக்கின்றமை தெளிவாகின்றது. இவ்வாறு மக்களின் ஜனநாயகத்துடன் யாரும் விளையாட முடியாது. நல்லாட்சி அரசாங்கத்தில் நாங்கள் இதனை எதிர்பார்க்கவில்லை. அந்தவகையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி முக்கிய தீர்மானம் ஒன்றை விரைவில் எடுக்கும் என்றார்.