Breaking News

தாயகம் தமிழகம் புலம்பெயர்ந்தோர் ஒரே நோக்கோடு பயணிக்கவேண்டும் – சிவாஜிலிங்கம்

தாயகம் தமிழகம் புலம்பெயர்ந்தோர் ஒரே நோக்கோடு பயணிக்கவேண்டும் என சிட்னியில் திங்கட்கிழமை நடைபெற்ற நினைவேந்தல்நாள் நிகழ்வில் பங்குபற்றி உரையாற்றும்போதே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமாகாணசபை உறுப்பினருமான திரு. சிவாஜிலிங்கம் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களையும், ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளையும் இழந்து, விடுதலைப்பயணத்தில் முக்கியமான காலகட்டத்தில் நிற்கின்றோம். சிட்னி வருவதற்கு முன்பாக முள்ளிவாய்க்காலிலும் பின்னர் திருமலையிலும் பருத்தித்துறையிலும் யாழ் நகரபகுதியிலும் நினைவேந்தல் வாரங்களில் தீபங்களை ஏற்றி, எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்திவிட்டே வந்துள்ளேன்.

விடுதலைப்போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தினால், சட்ட நடவடிக்கை எடுப்போம் என புலனாய்வாளர்கள் மிரட்டினார்கள். எனினும் எமது உறவுகளை நினைவுகூருவதை யாரும் தடைசெய்யமுடியாது எனக்கூறி நிகழ்வுகள் செய்தோம்.

தற்போது மைத்திரி அரசாங்கம் வந்திருக்கின்றது. அதனால் தான் இப்படி நீங்கள் கதைக்கமுடிகின்றது எனச்சொல்லலாம். ஆனால் மகிந்த ராஜபக்சவையும் சரத்பொன்சேகாவையும் தூக்குகயிறில் ஏற்றும்மட்டும் ஓயமாட்டோம் என அன்று தொடக்கம் சொல்லிவருகின்றோம்.

புதிய ஆட்சிமாற்றம் என்ன செய்யப்போகின்றது?

மைத்திரிபால சிறிசேனா ரணில் விக்கிரமசிங்க சந்திரிகா பண்டாரநாயக்கா அனைவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். எமது அரசியல் உரிமைகள் விடயத்தில் தாங்களாகவே எதனையும் தருவதற்கு அவர்கள் விரும்பவில்லை.

எமது விடுதலைப்போராட்டமே தமிழ்மக்களின் உரிமைபற்றிய விடயத்தில் கவனத்தை ஈர்க்ககூடிய முக்கியத்துவத்தை கொடுத்துள்ளது. மாவீரர்களின் தியாகங்களே எமது விடுதலைக்கான பயணத்தை இலகுபடுத்தியுள்ளது என்பதை உறுதியாக கூறவிரும்புகின்றேன்.

இப்போது நீங்கள் செய்கின்ற அரசியல் போராட்டங்களால் பிரயோசனம் உண்டா?

ஆம் நாங்கள் அனைவரும் செய்கின்ற இயன்ற அனைத்து போராட்டங்களுமே ஏதோவொரு வழியில் எமது உரிமைப்போராட்டத்தை வலுப்படுத்தி செல்லகின்றது என்பததை மறந்துவிடாதீர்கள்.

முதலில் 2002 ஆம் ஆண்டிலிருந்துதான் தமிழர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை ஆராயப்போகின்றோம் என்றார்கள். ஆனால் இன்று அதற்கு அப்பாலும் செல்லக்கூடிய விசாரணைக்கான காலஎல்லை விரிவுபடுத்தப்பட்டது. இன்று நாங்கள் வடமாகாணசபையில் நிறைவேற்றிய இனப்படுகொலைபற்றிய தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதனை அவர்கள் உதாசீனம் செய்யமுடியாது. இவை எல்லாம் நீங்கள் சும்மா இருந்திருந்தால் நடந்திருக்காது.

நீங்கள் என்ன செய்யமுடியும்?

அரசியல்வேலை செய்பவர்கள் அரசியல் செய்யுங்கள். சிறிய சிறிய அரசியல் வேலைத்திட்டங்களும் எம்மை முன்னோக்கி நகர்த்த உதவும் அதனை செய்யுங்கள். ஏனையவர்கள் தாயகத்தில் உள்ள எமது உறவுகளுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.

அண்மையில் பாரதப்பிரதமர் மோடி வருகை தந்தபோது 13வது திருத்தம் என்ற உருப்படியற்ற தீர்வுத்திட்டம் தொடர்பாக காலத்தை இழுத்தடிக்காமல் ஒரு முழுமையான தீர்வுத்திட்டத்திற்கு ஆதரவளிக்கவேண்டும் எனக்கேட்டுக்கொண்டோம். அவர் கோப்பிரேட் பெடரலிசம் என்ற தீர்வு பற்றிய கருத்தை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

தாயகமக்களும் தமிழக மக்களும் புலம்பெயர்ந்த தமிழுறவுகளும் ஒரே நோக்கோடு இணைந்து வேலை செய்தால் நிச்சயமாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் தமிழ்மக்கள் தங்களைத் தாங்களே ஆளுகின்ற உரிமையுள்ள ஒரு தீர்வை பெற்றுக்கொள்ளமுடியும். நாங்கள் வெவ்வேறு அணுகுமுறைகளில் வெவ்வேறு வேகத்தில் எமது போராட்டங்களை முன்னகர்த்தலாம். ஆனால் நோக்கம் ஒன்றாக இருக்கவேண்டும்.

தற்போதை ஐநா விசாரணை அறிக்கை என்ன நடக்கபோகின்றது?

செப்ரம்பரில் வெளியாகின்ற அறிக்கையில் நிச்சயமாக தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமைகள் வெளியுலகிற்கு கொண்டுவரப்படும். ஆனால் அந்த அறிக்கையில் என்ன பரிந்துரை செய்யப்போகின்றார்கள் என்பதே முக்கியமானது. நான் கடந்த தடவை ஜெனிவா சென்றபோது 150 இற்கும் மேற்பட்ட இராசதந்திரிகளுடன் பேசினேன். தனிப்பட்ட ரீதியில் 30 மேற்பட்ட இராசதந்திரிகளுடன் பேசியிருகின்றேன்.

அவர்களுடைய கருத்தை பார்க்கின்றபோது ஒரு உள்ளகவிசாரணை ஒன்றையே பரிந்துரை செய்யப்போகின்றார்கள். வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் என்ற போர்வையில் சிலர் இருக்ககூடும். மகிந்த ராயபக்சாவால் நியமிக்கப்பட்ட சர்வதேச திறனாய்வாளர்கள் குழு என்ன செய்தது என்று உங்களுக்கு தெரியும். எனவே உள்ளகவிசாரணையை நாம் நம்பமுடியாது.

சர்வதேச விசாரணையே எமக்கு வேண்டும். அல்லது சர்வதேச வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி தமிழ்மக்களுக்கான தீர்வை பெற்றுத்தர சர்வதேசம் முன்வரவேண்டும். எமது அரசியல் செயற்பாடுகளுக்கு தடையை ஏற்படுத்த எங்களை கைதுசெய்யலாம். எத்தனையோ மாவீரர்கள் தங்கள் மேன்மையான உயிரை தியாகம் செய்துவிட்டார்கள். நாங்கள் உயிருக்கு பயந்து பயந்தோடமாட்டோம் போராடுவோம். தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம் எனக்கூறி தனதுரையை நிறைவுசெய்தார்.