செப்ரெம்பரில் புதிய நாடாளுமன்றம் - ஜனாதிபதி
வரும் செப்ரெம்பர் மாதம் புதிய நாடாளுமன்றம் அமைக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று காலை ஊடக ஆசிரியர்கள், நிர்வாகிகளை சந்தித்துப் பேசிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
“தற்போதைய நாடாளுமன்றத்தின் மூலம் தீர்க்கப்பட வேண்டிய சில விடயங்கள் உள்ளன. 20வது திருத்தச்சட்டம் தொடர்பான இணக்கப்பாடு எட்டப்பட்டு, அரசியலமைப்புச் சபைக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும்.
எவ்வாறாயினும், வரும் செப்ரெம்பரில் புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பாக நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது, கூடிய விரைவில் நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.