மைத்திரியிடம் வேகாத மகிந்தவின் பருப்பு!
தனது ஆதரவாளர்களுக்கு எதிரான ஊழல் மோசடி விசாரணைகளை நிறுத்துமாறு முன்னாள் ஜனா திபதி மகிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கையை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்து விட்டார்.
அரச உயர்மட்ட அதிகாரியொருவர் சீன ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை முன்னாள் மற்றும் இன்னாள் ஜனாதிபதிகளுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
எனினும் குறித்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்து விட்டார் என அவ் அதிகாரி சீன ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் நல்லாட்சியை முன்னெடுத்து வருகின்றது எனவும் நல்லாட்சியை பேணும் நோக்கிலேயே முன்னாள் ஜனாதிபதியின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஊழல் மோசடிகளுடன் ஈடுப்பட்டவர்களுக்கு எதிரான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தாக குறித்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார். அதுமாத்திரமல்லாது இலங்கையில் காணப்படுகின்ற சட்ட நடவடிக்கைகளில் தான் ஒருபோதும் தலையீடு செய்வதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி தன்னை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என விடுத்த கோரிக்கையையும் ஜனாதிபதி நிராகரித்ததாகவும்,வாக்காளர்களே பிரதமரை தெரிவு செய்ய வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியதாகவும் அரச உயர்மட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.