Breaking News

விக்னேஸ்வரனின் கோரிக்கை! ரணிலுக்கு அறிவுரை கூறிய அஸ்கிரிய பீடாதிபதி

வடக்கில் இருந்து இலங்கை இராணுவம் விலக்கப்பட வேண்டும் என்ற வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர், இத்தகைய கோரிக்கைகள் விடயத்தில் அரசாங்கம் விவேகத்துடன் செயற்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கண்டியில் அஸ்கிரிய பீடாதிபதி, வண.கலகம அட்டடசி தேரரை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இதுபோன்ற கோரிக்கைகள் வரும் போது, அரசாங்கம் கவனமாக இருக்க வேண்டும். ஒரே தேசியக் கொடியின் கீழ் இலங்கை ஒன்றுபட்டிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நன்றாகப் பணியாற்றுகிறது. இந்த ஆண்டு சுதந்திர நாள் நிகழ்வில், கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பங்கேற்றனர்.

இதன் மூலம் இலங்கை சுதந்திர நாளையும், இராணுவத்தையும் கூட மூகூட்டமைப்பு ஏற்றுக் கொண்டது வெளிப்படுகிறது.  சில வேளைகளில் சில கூட்டமைப்பு உறுப்பினர்களால், எதிர்மறையான கருத்துகள் வெளியிடப்பட்டிருக்கலாம். ஆனால் நாடாளுமன்றத்தில் அரசாங்கமும் கூட்டமைப்பும் மிகவும் புரிந்துணர்வுடன் செயற்படுகின்றன.

வடக்கில், போர் முடிவுக்கு வந்த பின்னர், இராணுவத்துக்குத் தேவைப்படாத நிலங்கள், அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.