Breaking News

மகிந்த அணியினரின் வெற்றிவிழா – கொழும்பில் இன்று ஏற்பாடு

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவு கூரும் வகையில், இலங்கைத் தீவில் உள்ள தமிழர்கள் இன்று துக்கம் அனுஷ்டிக்கும் நிலையில், கொழும்பில் மகிந்த ராஜபக்ச அணியினரால் இன்று போர் வெற்றி விழா கொண்டாட்டங்கள் நடத்தப்படவுள்ளன.

கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான தரப்பினராலேயே இந்த வெற்றி விழா ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இதில் மகிந்த ராஜபக்ச கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், பெருமளவு அரசியல் பிரமுகர்களும், பௌத்த அடிப்படைவாதிகள் மற்றும் பிக்குகளும் கலந்து கொள்வர் என்றும் கருதப்படுகிறது. இந்த நிகழ்வுக்கு மகிந்த ராஜபக்ச அழைக்கப்பட்டுள்ளதாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தும் முனைப்புடன் செயற்படும் தரப்பினரே இந்த நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளனர். இந்த அணியினர் ஏற்கனவே நடத்திய கூட்டங்களில் மகிந்த ராஜபக்ச பங்கேற்கவில்லை. எனினும், இன்றைய போர் வெற்றி விழாவில் அவர் பங்கேற்பார் என்றும், இதன் மூலம் அரசியல் ரீதியாகத் தன்னைப் பலப்படுத்திக் கொள்ள எத்தனிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.