சம்பூர் மக்களின் காணி உரிமைக்காக மீண்டும் உயர்நீதிமன்றம் செல்கிறது கூட்டமைப்பு
சம்பூரில் பொதுமக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்கும் சிறிலங்கா அதிபரின் வர்த்தமானி உத்தரவை இடைநிறுத்தி, இலங்கை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு தொடர்பான இடையீட்டு மனுவொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாக்கல் செய்யவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். சம்பூரில் மக்கள் மீளக்குடியேறுவதற்காக, அந்தப் பகுதி மக்களிடம் இருந்து முன்னைய அரசாங்கத்தினால் பறிக்கப்பட்ட நிலங்களை மீள ஒப்படைக்கும் வர்த்தமானி உத்தரவு ஜனாதிபதியால் அண்மையில் வெளியிடப்பட்டது.
அதற்கு எதிராக இலங்கை கேட்வேஸ் இன்டஸ்றீஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், எதிர்வரும் 21ம் நாள் வரை, ஜனாதிபதியின் உத்தரவை இடைநிறுத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் தலையிட்டு, இந்த நிலங்களில் வாழ்வதற்கான மக்களின் உரிமைகள் தொடர்பாகவும், நீதிமன்ற உத்தரவால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக் குறித்தும், உயர்நீதிமன்றிடம் விளக்கமளிக்கவுள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றின் தடை உத்தரவினால் 825 குடும்பங்களின் மீள்குடியமர்வு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உயர்நீதிமன்றத்திடம் சுட்டிக்காட்டவுள்ளார்.