Breaking News

ஆட்சி மாறியும் தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை! நல்லை ஆதீனம் சுட்டிக்காட்டு

இலங்கைக்கான பிரித்தானியாவின் உயர்ஸ் தானிகர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற் கொண்டுள்ளார். இலங்கைக்கான பிரித்தானியவின் உயர்ஸ்தானிகராக புதிதாக பதவியேற்ற ஜேம்ஸ் டறுஸ் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டதுடன் நல்லை ஆதீனத்தைச் சந்தித்து கலந்துரையாடினார். 

 இதன்போது யுத்தத்திற்குப் பின்னர் யாழ். மாவட்டத்திலுள்ள நிலமைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார். அத்துடன் புதிய அரசு ஆட்சிக்கு வந்த பின்னரும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என நல்லை ஆதின குருமுதல்வர் உயர்ஸ்தானிகரிடம் சுட்டிக் காட்டியிருந்தார். 

மேலும் உயர்பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் மக்களுடைய பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் இராணுவத்தேவைக்காக கையகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இதனால் மக்கள் இன்றும் நலன்புரி முகாம்களில் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் உயர்பாதுகாப்பு வலையப்பகுதியில் உள்ள பாடசாலைகள் கோயில்கள் என்பன உடைக்கப்பட்டுள்ளன. அவற்றைச் சென்று பார்வையிடுவதற்கு கூட எமக்கு அனுமதியில்லை. 

அத்துடன் நீண்டகாலமாக வழக்குகள் எவையும் தொடுக்கப்படாது சிறைகளில் வாழும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யாது வைத்திருக்கின்றனர். அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்குப் பதிலளித்த உயர்ஸ்தானிகர், பதவியேற்று இரண்டு மாதங்களே ஆகின்றன. யுத்தத்திற்குப் பின்னர் வடக்கு மாகாணத்தில் உள்ள தற்போதைய நிலமைகளை ஆராய்வதற்கே இங்கே வந்தேன். 

 நேற்று கிளிநொச்சி , முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு சென்று அங்குள்ள நிலமைகளை அறிந்து கொண்டேன் . இன்றைய தினம் இங்கு வருகை தந்ததன் மூலம் பல விடயங்களை அறியக் கூடியதாக இருந்தது. எனக்கு கூறப்பட்ட விடயங்கள் குறித்து உரிய தரப்புக்களுக்கு தெரியப்படுத்தி அதற்கான நடவடிக்கையினை எடுப்பேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.