Breaking News

திஸ்ஸவை ஐதேக வெளியேற்றியது செல்லுபடியற்றது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க நீக்கப்பட்டது செல்லுபடியாகாது என்று  உயர்நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்துள்ளது.

ஐதேகவின் பொதுச்செயலராக இருந்த திஸ்ஸ அத்தநாயக்க, கடந்த அதிபர் தேர்தலின் போது, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்திருந்ததுடன், அரசாங்கத்தில் இணைந்து சுகாதார அமைச்சர் பதவியையும் பெற்றுக் கொண்டார்.

இந்தநிலையில், கடந்த பெப்ரவரி மாதம், அவரை கட்சியின் அடிப்படை உறப்பினர் பொறுப்பில் இருந்து ஐதேக நீக்கியது. இதனை எதிர்த்து, மார்ச் மாதம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார் திஸ்ஸ அத்தநாயக்க.

அந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை உயர்நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்ட போது, திஸ்ஸ அத்தநாயக்கவை கட்சியில் இருந்து நீக்குவதற்கு முறையாக வழிமுறைகளை பின்பற்றவில்லை என்று கூறி, அவரது வெளியேற்றம் செல்லுபடியற்றது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.