இராணுவம் தமிழர்களுக்கு எதிராக யுத்தம் செய்யவில்லையாம்!
இலங்கை இராணுவம் தமிழர்களுக்கு எதிராகவோ அல்லது வேறு இனத்திற்கு எதிராகவோ யுத்தம் செய்யவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவம் தமிழர்களுக்கு எதிராக யுத்தம் செய்ததாக காட்டுவதற்கு சிலர் முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் அமெரிக்காவால் உலகில் கடுமையான பயங்கரவாத இயக்கம் என்று அறிவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகவே இலங்கை இராணுவம் யுத்தம் செய்ததாக மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
நாடு இரண்டாக பிளவுற்றுக் காணப்பட்டதாகவும் அப்போது இலங்கையில் மீட்கப்படாத பிரதேசம் காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அப்படியான நாட்டை ஒன்றுசேர்க்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராணுவத்தினர் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகவும் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கும் அளவிற்கு சென்றுள்ளதாகவும் ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற சமய நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.