Breaking News

கதிரையில் களமிறங்கும் மகிந்த

பொதுஜன ஐக்கிய முன்னணியின் கதிரைச் சினத்தில் மகிந்தவை களமிறக்குவதற்கு அவரது அடிப்பொடிகள் கடைசி முயற்சியில் இறங்கி யுள்ளனர். இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை உடையவிடாது எப்படி தேர்தலை எதிர்கொள்வதென்பதை தீர்மானிக்கும் தீர்மானம்மிக்க சந்திப்பொன்று இன்று கொழும்பில் நடக்கவுள்ளது.

மீண்டும் அதிகாரஆசை கொண்டுள்ள மகிந்த எப்படியாவது பொதுத்தேர்தலில் களமிறங்க துடியாய் துடிக்கிறார். எனினும், அவருக்கு வாய்ப்பான களத்தை கொடுக்க மைத்திரி மறுத்துவிட்டார். சுதந்திரக்கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் மகிந்த களமிறங்க முடியாது. தான் உயிருடனிருக்கும்வரை அது நடக்காதென மைத்திரி அடித்துக் கூறிவிட்டார். 

இதனையடுத்து மகிந்தவின் பின்னால் கூடியுள்ள அணி, அவரை பொதுஜன ஐக்கிய முன்னணியின் கதிரைச்சின்னத்தில் களமிறக்க பகீரதபிரயத்தனம் செய்கிறது. 1994இல் உருவாக்கப்பட்ட இந்த கூட்டணி இரண்டு ஜனாதிபதி தேர்தல்களில் அமோக வெற்றிபெற்றது. மகிந்தவை இந்தக்கூட்டணியில் களமிறக்கினால் கைமேல் பலன்கிடைக்குமென அவரது ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்.

பொதுஜனஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளராக இருப்பவர் முன்னாள் பொதுச்செயலாளர் டி.எம்.ஜயரட்ன. அந்த கூட்டணியில் மகிந்தவை களமிறக்குவதற்கு அவரது ஆதரவு கிடைக்குமென நம்பப்படுகிறது. அண்மையில் மகிந்தவிற்கு அதரவாக அவரும் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் தலைவர்கள் அவசர கூட்டத்தை கூட்டுகிறார்கள். இன்றைய சந்திப்பு தீர்மானம்மிக்கதாக அமையுமென தெரிகிறது. மகிந்தவை களமிறக்க வேண்டுமென ஒரு பிரிவு இன்றும் அடம்பிடிக்குமென தெரிகிறது. மகிந்தவை களமிறக்க முடியாதென மைத்திரி அறிவித்துள்ளதால் அடுத்த கட்டத்தை ஆராயலாமென இன்னொரு தரப்பும் இன்றும் வலியுறுத்துமென தெரிகிறது.

இதேவேளை, இதற்குள் இன்னொரு தரப்பும் கிளம்பியுள்ளது. உனக்குமில்லை, எனக்குமில்லை என்ற பாணியில் அந்த தரப்பு ஒரு தீர்வை முன்வைத்துள்ளது. சமல் ராஜபக்சவை களமிறக்குவோம். அதற்கு மைத்திரி, மகிந்த இருவரும் ஆதரவளிக்க வேண்டுமென்பது அவர்கள் நிலைப்பாடு. இந்த குழுவும் இன்று வெடியை கொளுத்திப் போடலாம்.