வன்முறையுடன் தொடர்புடையவர்கள் தொடர்ந்தும் கைதாவர்! வடக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர்
யாழ்.நீதிமன்ற சூழலில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இதுவரை 129 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கொழும்பில் கைது செய்யப்பட்ட சசிகுமார் என்பவரை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த இருந்த நிலையில் அங்கு கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் உள்நுழைந்து நீதிமன்றத்தை தாக்கியதுடன் வாகனங்களையும் அடித்து நொருக்கினர்.
இதனையடுத்து பொலிஸாரினால் இதுவரை 129 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மோட்டார் சைக்கிள்கள் 60 , துவிச்சக்கரவண்டிகள் 43, முச்சக்கர வண்டிகள் 5 ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்டவர்களது வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டு வருவதுடன் அதன்பின்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவர் என்றும் வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டவர்களது உறவினர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் மற்றும் நீதிமன்றத்தை அண்டிய பகுதிகளிலும் குழுமியுள்ளமை குறிப்பிடத்தக்கது.