Breaking News

மாறாத முள்ளிவாய்க்கால் சோகம் -சி.சிறிதரன்

முள்­ளி­வாய்க்கால் பேர­வலம் நடந்து ஆறு வரு­டங்கள் நிறை­வ­டை­கின்­றன. ஆயினும் அந்தப் பேர­வ­லத்தின் தாக்­கங்கள் இன்னும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளி­ட­மி­ருந்து மறை­ய­வில்லை. குடும்ப உற­வி­னர்­க­ளையும் உற்­ற­வர்­க­ளையும் இழந்த சோகம் இன்னும் ஆற­வில்லை. மாறாத ரணங்­க­ளாக அந்த சோகம் இன்னும் அவர்­களை வருத்திக் கொண்­டி­ருக்­கின்­றது.

இந்த சோகத்தில் இருந்து சிறிது ஆறுதல் பெறத்­தக்க வகையில் அந்த சோக தினங்­களை நினை­வு­கூ­ரவோ அல்­லது அப்­போது அவ­ல­மாக மடிந்து போன­வர்­களை நினைத்து, அவர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­தவோ கடந்த ஐந்து வரு­டங்­க­ளாக முடி­யாத நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இதற்­கான அனு­ம­தியை முன்­னைய அர­சாங்கம் மறுத்­தி­ருந்­தது. 

இறந்­த­வர்­களை நினை­வு­கூர்ந்து, சம­ய­ாசா­ரப்­படி, அவர்­க­ளுக்­கான கிரி­யை­களைச் செய்ய முடி­யாத வகை­யிலும், அவர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்த முடி­யாத வகை­யிலும் அர­சாங்­கத்தின் உத்­த­ர­வுக்­க­மைய இரா­ணு­வத்­தினர் கடு­மை­யாக நடந்து கொண்­டி­ருந்­தார்கள். இரா­ணு­வத்தின் இந்தச் செயற்­பாடு முள்­ளி­வாய்க்­காலின் சோகத்தை மேலும் மேலும் அதி­க­ரிப்­ப­தற்கே வழி­யேற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

யுத்தம் என்றால் இழப்­புக்கள் இருக்­கத்தான் செய்யும். அதனைத் தவிர்க்க முடி­யாது. ஆனால், முள்­ளி­வாய்க்கால் யுத்தம் என்­பது வெறும் யுத்­த­மல்ல. அங்கு ஓர் இன அழிப்பே நடை­பெற்­றது என்­ப­தற்குப் பல ஆதா­ரங்­களை, பலரும் முன்­வைத்­தி­ருக்­கின்­றார்கள். ஆனால் யுத்­தத்தை முன்­னின்று நடத்­திய அர­சாங்கம் அதனை, இது­வ­ரை­யிலும் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை.

தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மை­களை மறுத்து, அந்த இனத்தை அடக்­கி­யொ­டுக்கி வைத்­தி­ருப்­ப­தற்­காக மறை­மு­க­மான நிகழ்ச்சி நிரல்­களின் ஊடாக காடை­யர்­க­ளையும் கொள்­ளை­யர்­க­ளையும் அவ்­வப்­போது ஏவி­விட்டு, அந்த மக்கள் மீது பல­த­ரப்­பட்ட சந்­தர்ப்­பங்­களில் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டன. அவ்­வா­றான தாக்­கு­தல்­களை வெறும் வன்­செ­யல்­க­ளாகச் சித்­த­திரித்து கடந்த காலங்­களில் மாறி மாறி பத­வியில் இருந்த அர­சாங்­கங்கள், அவற்­றுக்­கான பொறுப்­புக்­களை ஏற்­காமல் தப்­பித்துக் கொண்­டி­ருந்­தன.

அது மட்­டு­மல்­லாமல், கடந்த 1956 ஆம் ஆண்டு தனிச்­சிங்­களச் சட்டம் கொண்டு வரப்­பட்ட காலம் தொடக்கம் அவ்­வப்­போது தொடர்ச்­சி­யாக இந்த வன்­மு­றைகள் அரங்­கேற்­றப்­பட்டு வந்­துள்­ளன. தேர்­தல்­களின் போதும், வேறு சந்­தர்ப்­பங்­க­ளிலும் இந்த வன்­மு­றைகள் அதி­கார வர்க்­கத்­தி­னரின் ஆத­ர­வுடன், அவர்­களின் ஆசி­யுடன் இடம்­பெற்று வந்­தன. அவற்றில் 1983 ஆம் ஆண்டு இடம்­பெற்ற கறுப்பு ஜுலை கல­வரம் உச்­ச­மா­னது. அந்தக் கல­வ­ரங்­களைக் கண்டு, உல­கமே அஞ்­சி­யொ­டுங்­கி­யது. 

ஆனால், அப்­போ­தைய வன்­மு­றை­களில் ஈடு­பட்­டி­ருந்த எவ­ரை­யுமே இந்த நாட்டின் அர­சாங்­கங்கள் சட்­டத்தின் முன் நிறுத்­த­வில்லை. பல­ரு­டைய கண்­முன்னால் பகி­ரங்­க­மாக மேற்­கொள்­ளப்­பட்ட அந்தப் பயங்­க­ர­வாத வன்­மு­றைகள் பற்­றியோ, அவற்றில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்கள் பற்­றியோ இந்த நாட்டின் நீதி தேவ­தையும் கண்­டு­கொள்­ள­வில்லை. நீதி­மன்­றங்­களில் வழு­வாத நீதியின் அடை­யாளச் சின்­ன­மாக வைக்­கப்­பட்­டுள்ள நீதி­தே­வ­தை­களின் கண்கள் கறுப்புத் துணி­யினால் கட்­டப்­பட்­டி­ருப்­ப­தனால், நீதி­மன்­றங்­க­ளுக்கு இந்த அநி­யா­யங்கள் தெரி­ய­வ­ராமல் போய்­விட்­டதோ என்­னவோ தெரி­ய­வில்லை.

இத்­த­கைய இனக்­க­ல­வ­ரங்கள் ஒரு­பு­ற­மி­ருக்க, தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மை­க­ளுக்­காக அஹிம்சை ரீதியில் குரல் கொடுத்த தமிழ் அர­சியல் தலை­வர்கள், தொண்­டர்கள் மீதும், அவர்­களின் பின்னால் அணி­தி­ரண்ட பொது­மக்­களின் மீதும் அரச தரப்பு குண்­டர்­களும், பொலி­சாரும் பின்னர் இரா­ணு­வத்­தி­னரும் ஆயு­தங்­க­ளுடன் ஏவி­வி­டப்­பட்டு, அவர்கள் அடித்து நொறுக்­கப்­பட்­டார்கள்.

தமது கோரிக்­கை­களை நிறை­வேற்­றிக்­கொள்­வ­தற்­காக பேச்­சு­வார்த்­தைகள் இணக்கச் செயற்­பா­டுகள் என்­ப­வற்றை மேற்­கொண்ட போதிலும் தமிழர் தரப்பின் நியா­ய­மான கோரிக்­கைகள், வேண்­டு­தல்கள், என்­பன செவிடன் காதில் ஊதிய சங்­காகிப் போயின. இத­னை­ய­டுத்து, அர­சாங்­கங்­களின் மீது அழுத்­தத்தைப் பிர­யோ­கிப்­ப­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்ட ஒத்­து­ழை­யாமை நட­வ­டிக்­கை­களும் அஹிம்சை வழி­யி­லான போராட்­டங்­களும் அதி­கார இரும்புக் கரங்கள் கொண்டு அடக்­கப்­பட்­டன. 

இதனால் அரச பயங்­க­ர­வாதம் எதிர்ப்பார் எவ­ரு­மின்றி ஆண­வத்­தோடு தலை­வி­ரித்­தா­டி­யது. இதனைக் கட்­டுப்­பாட்டில் கொண்டு வந்து, அவ்­வப்­போது அரங்­கேற்­றப்­பட்ட வன்­மு­றை­களில் இருந்து தமிழ் மக்­களைப் பாது­காத்துக் கொள்­ளவும், அவர்­களின் அர­சியல் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கான அழுத்­தத்தைப் பிர­யோ­கிப்­ப­தற்­கா­க­வுமே ஆயுதப் போராட்டம் தலை தூக்­கி­யது.

ஆனால், அந்த ஆயுதப் போராட்­டத்தை வெறும் பயங்­க­ர­வாதச் செய­லாகக் காட்டி, அர­சியல் உரி­மைக்­காக ஆயு­த­மேந்திப் போரா­டி­ய­வர்­களை பயங்­க­ர­வா­தி­க­ளாகச் சித்­த­ரித்து, அவர்­களை ஒழித்துக் கட்­டு­வ­தற்­காக பெரும் எடுப்பில் இரா­ணுவ நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது. இதன் கார­ண­மா­கவே இந்த நாட்டில், ஒரு மோச­மான யுத்த மோதல்கள் இடம்­பெற்­றன. ஓர் அர­சாங்­கத்­திற்கும் அந்த நாட்டின் குடி­மக்­களில் ஒரு பகு­தி­யி­ன­ரா­கிய ஓர் இனத்தைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கும் இடையில் நடை­பெற்ற இந்த சிவில் யுத்­த­மா­னது, வெஞ்­சினம் கொண்ட இரு வேறு நாடு­க­ளுக்­கி­டையில் அவற்றின் ஆயு­தப்­ப­டை­க­ளுக்­கி­டையில் நடை­பெற்ற ஒரு மோச­மான யுத்­தத்தைப் போன்று இடம்­பெற்­றி­ருந்­தது.

இத்­த­கைய யுத்­தத்தில் ஈடு­பட்­டி­ருந்த விடு­த­லைப்­பு­லி­களைப் பயங்­க­ர­வா­திகள் என இலங்கை அர­சாங்கம் சித்­த­ரித்து, அதற்­கேற்­ற­வாறு சர்­வ­தேச அரங்கில் தனக்­கான ஆத­ரவைத் திரட்­டிக்­கொண்­டது. அப்­போது உலக அரங்கில் பயங்­க­ர­வா­தமும், பயங்­க­ர­வா­தி­களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற எதிர்ப்பு உணர்வும் மிகத் தீவி­ர­மாக முனைப்புப் பெற்­றி­ருந்­தன. இந்தப் பின்­ன­ணியில் பயங்­க­ர­வா­திகள் என சித்­த­ரிக்­கப்­பட்­டி­ருந்த, விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான உணர்வை அதி­கப்­ப­டுத்தி, அவர்­களை இல்­லா­தொ­ழிக்க வேண்டும் என்ற தேவைக்­கு­ரிய இரா­ணுவ ரீதி­யி­லான ஆத­ரவை இலங்கை அரசு, சர்­வ­தேச மட்­டத்தில் மிக சாமர்த்­தி­ய­மா­கத் திரட்­டிக்­கொண்­டது.

இந்த ஆத­ர­வுதான், விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ராக, தரை, கடல் மற்றும் வான் வழி­களில் இரா­ணுவ தாக்­கு­தல்­களை மிகவும் வலி­மை­யோடு இலங்கை அரச படைகள் மேற்­கொள்­வ­தற்கு ஏது­வா­கி­யி­ருந்­தன. விடு­த­லைப்­பு­லிகள் மீது உக்­கிர தாக்­கு­தல்­களை நடத்­திய அரச படை­க­ளுக்கு, விடு­த­லைப்­பு­லி­களின் இரா­ணுவ இர­க­சி­யங்கள், ஊடு­ருவல் மற்றும் பல்­வேறு உளவு நட­வ­டிக்­கை­களின் மூலம் இலங்கைப் படை­க­ளுக்கு அப்­போது கிடைத்­தி­ருந்­ததும், பேரு­த­வி­யாக அமைந்­தி­ருந்­த­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

சர்­வ­தே­சத்தின் ஆத­ரவு இலங்கை அரச பக்கம் சாய்ந்­தி­ருந்­த­போ­திலும், மனித உரிமை அமைப்­புக்­களும், மனித உரி­மைகள் மீது பற்­று­கொண்ட சில நாடு­களும், விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்­களில் இரா­ணு­வத்­தினர் மித­மிஞ்­சிய இரா­ணுவ பலத்தைப் பிர­யோ­கித்­ததைக் கண்­டிக்­கவே செய்­தி­ருந்­தன. இருப்­பினும் அர­சியல் ரீதி­யா­கவும், இரா­ணுவ ரீதி­யா­கவும், பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான சர்­வ­தேச போக்கின் அப்­போ­தைய ஒழுங்கும், இறை­மை­யுள்ள அர­சு­களின் பாது­காப்பில் அப்­போது நில­விய கரி­ச­னையும் மனித உரிமை மீறல் தொடர்­பி­லான கண்­ட­னங்­க­ளையும், யுத்­தத்தை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்­கை­யையும் வலு­வற்­ற­தாக்­கி­யி­ருந்­தன.

விடு­த­லைப்­பு­லி­களும் அரச படை­களின் இரா­ணுவ பலத்­திற்கு சளைக்­காமல் தமது யுத்த தந்­தி­ரோ­பா­யங்­களைப் பயன்­ப­டுத்தி எதிர் சம­ரா­டி­யி­ருந்த போதிலும், இரா­ணு­வத்­தினர் பயன்­ப­டுத்­திய அதி­வ­லு­வுள்ள உத்­தி­களும், பொது­மக்கள் என்றும் விடு­த­லைப்­பு­லிகள் என்றும் பாராமல் சகட்டு மேனிக்கு தாக்­கு­தல்­களைத் தொடுத்­தி­ருந்த போக்கும், யுத்தச் சூழலில் சிக்­கி­யி­ருந்த பொது­மக்­க­ளுக்­கான மனி­தா­பி­மான சேவை­களைக் கூட போர் உத்­திக்­கான மூலோ­பா­ய­மாக மாற்­றி­யி­ருந்­த­மையும், இந்த யுத்த மோதல்­களில் விடு­த­லைப்­பு­லிகள் வெற்றி பெற முடி­யாமல் போயி­ருந்­தது.

அதே­நேரம், படிப்­ப­டி­யாக விடு­த­லைப்­பு­லி­களின் கட்­டுப்­பாட்டில் இருந்த நிலப்­ப­ரப்பைக் கப­ளீ­கரம் செய்து, பாது­காப்பு வல­யங்கள் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்த பிர­தே­சங்கள் மீதும், மனி­தா­பி­மான வைத்­திய சேவைகள் இடம்­பெற்ற வைத்­திய நிலை­யங்கள் மீதும் நடத்­தப்­பட்ட அகோ­ர­மான தாக்­கு­தல்­களில் அப்­பாவிப் பொது­மக்கள் பெரும் எண்­ணிக்­கையில் அழிந்து போனார்கள்.

மிகவும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அள­வி­லான உணவுப் பொருட்­க­ளையும் அத்­தி­யா­வ­சிய பொருட்­க­ளையும் மட்­டுமே, யுத்த மோதல்கள் இடம்­பெற்ற பகு­திக்குள் அனு­ம­தித்­தி­ருந்த அர­சாங்கம், அந்தப் பொருட்கள், அங்கு பொது­மக்­க­ளுக்கு விநி­யோகம் செய்­யப்­பட்­ட­போது, அவற்றைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக அடித்துப் பிடித்துக் கொண்டு அலை­மோ­திய இடங்­க­ளையும் இலக்கு வைத்து அரச தரப்­பினர் தாக்­கு­தல்­களை நடத்­தி­யி­ருந்­தனர். 

இதனால் உணவுப் பொருட்­களை வாங்கச் சென்­றி­ருந்த பலர் உடல் சிதறி பலி­யாகிப் போனார்கள். வெளி­யி­டங்­களில் நடத்­தப்­பட்ட எறி­கணை தாக்­கு­தல்­களில் காய­ம­டைந்து அடுக்­க­டுக்­காகப் பதை­ப­தைத்து வைத்­திய நிலை­யங்­க­ளுக்குக் கொண்டு வரப்­பட்­ட­வர்­க­ளுக்கு வைத்­தியம் செய்­வ­தற்கு உரிய இட வச­தியும், போதிய மருந்து மற்றும் உப­க­ர­ணங்கள், பொருட்கள் இல்­லா­மலும் வைத்­தி­யர்­களும் அவர்­க­ளு­டைய உத­வி­யா­ளர்­களும் அவ­லப்­பட்டுக் கொண்­டி­ருந்த வேளையில் அந்த நிலை­யங்கள் மீதும் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­ட­தனால் அங்கு இடம்­பெற்ற அவ­லங்­க­ளையும் அகோ­ரத்­தையும் பலர் நேரில் கண்­டுள்­ளார்கள். அவற்றில் காய­ம­டைந்து உயிர் தப்­பிய பலர் இன்னும் அந்தக் காட்­சி­களை மெய் நடுங்க உள்ளம் வருந்தி சோர்­வ­டைய மறக்க முடி­யாமல் அவ­லப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

யுத்­தத்தில் தோற்­க­டிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, விடு­த­லைப்­பு­லி­க­ளு­டைய ஆயு­தங்கள் மௌனிக்­கப்­பட்­டதும், அவர்­க­ளு­டைய கட்­டுப்­பாட்டில் இருந்த பகு­திக்குள் கிளி­ய­ரன்ஸுசுக்­காக உட­ன­டி­யாகப் புயல்­வே­கத்தில் பிர­வே­சித்த படை­யினர் அங்கு பதுங்கு குழி­க­ளிலும், மறை­வி­டங்­க­ளிலும், பதுங்­கி­யி­ருந்­த­வர்கள், மீதும் வெளியில் வந்­த­வர்கள் மீதும் சர­மா­ரி­யாகத் துப்­பாக்­கிப்­பி­ர­யோகம் செய்­த­தாக அந்தச் சம்­ப­வங்­களில் தெய்­வா­தீ­ன­மாக உயிர்­தப்பி வந்­த­வர்கள் கூறி­யி­ருக்­கின்­றனர்.

யுத்­த­மோ­தல்கள் முடி­வ­டைந்­ததை அறி­யாத நிலையில் அகோ­ர­மாக இடம்­பெற்ற தாக்­கு­தல்­களில் சிறிது இடை­வெளி கிடைத்­தி­ருப்­ப­தாகக் கருதி வெளியில் வந்­த­வர்­களும், திடீ­ரென ஓய்ந்த துப்­பாக்கிச் சூடு­களும் எறி­கணை தாக்­கு­தல்­களும் மீண்டும் தொட­ரக்­கூடும் என்ற அச்­சத்தில் தொடர்ந்து மறைந்­தி­ருந்­த­வர்­க­ளுமே இவ்­வா­றான தாக்­கு­தல்­க­ளுக்கு இலக்­கா­கி­யி­ருந்­தாக அவர்கள் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர்.

யுத்த மோதல்­களில் மட்­டு­மல்­லாமல், யுத்தம் முடி­வ­டைந்த பின்னர், திடீ­ரென இரா­ணு­வத்­தி­ன­ரு­டைய பிர­சன்­னத்தைக் கண்ட மக்கள் பேயைக் கண்­ட­து­போன்று மிரண்டு போனார்கள். அவ்­வாறு திடீ­ரென சென்ற படை­யி­னரும், விடு­த­லைப்­பு­லி­கள்தான் அவ்­வாறு இருக்­கின்­றார்­களோ என்ற சந்­தே­கத்­திலும் அச்­சத்­திலும் அவர்கள் மீது கடு­மை­யா­கவே நடந்து கொண்­ட­தா­கவும் தப்பி வந்­த­வர்கள் கதை கதை­யாகக் கூறி­யி­ருக்­கின்­றனர்.

யுத்த மோதல்­களில் உயிர்­தப்­பி­யி­ருந்த பொது­மக்கள் அனை­வ­ரையும் அழைத்து வந்த இரா­ணு­வத்­தினர், திறந்த வெளியில் அமைக்­கப்­பட்­டி­ருந்த முட்­கம்பி வேலிக்குள் - ஒரு சிறிய இடத்தில் அடைத்­த­போது, அங்கு அனு­ப­வித்த வேத­னை­களை பலர் இப்­போதும் நினை­வு­கூர்­கின்­றார்கள். போதிய உண­வில்லை. குடிப்­ப­தற்குத் தண்­ணீர்­கூட இல்­லாத நிலையில் உடல் சோர்ந்து, மோதல்­களில் உயிர்­தப்­பு­வது தெரி­யாமல் உள்ளம் கலங்கி வாடிக்­கி­டந்த அவர்கள் திடீ­ரென இரா­ணு­வத்­தி­னரைக் கண்­ட­போதும், 

அவர்­களால் ஒரு சின்­னஞ்­சி­றிய இடத்­திற்குள் பெரும் எண்­ணிக்­கை­யான மக்­களை அடைத்­த­போதும் அவர்கள் அச்­சத்தில் மேலும் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். பல மணித்­தி­யா­லங்கள் அங்கு அடை­பட்­டுக்­கி­டந்­த­போது எரிக்கும் வெய்­யி­லிலும், உட­னி­ருந்­த­வர்­களின் உடல் வெப்­பத்­திலும் அவர்­களின் உடல்­களும் உள்­ளங்­களும் தகித்து தவித்­த­தா­கவும், அந்த வேத­னை­களை விளங்கிக் கொள்­ளத்­தக்க வகையில் வெறு­மனே சொற்­களில் விப­ரிக்க முடி­யாது என்றும் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் கூறு­கின்­றனர்.

'முள்­ளுக்­கம்பி கூட்­டுக்குள் அடைக்­கப்­பட்­டி­ருந்­த­போது இருப்­ப­தற்குக் கூட இட­மில்லை. நெருக்­கி­ய­டித்­துக்­கொண்டு இருந்த நாங்கள் அப்­போது பசி, தாகம், உள்ளத் தவிப்பு என பல வழி­க­ளிலும் மரண வேத­னை­யையே அனு­ப­வித்தோம். அதனை இப்­போது நினைத்­தா­லும்­கூட, உடல் நடுங்­குது. மன­துக்குள் என்­னவோ செய்­யிது' என்று இறுதி யுத்­தத்தில் சிக்கி உயிர்­தப்பி வந்­துள்­ள­வர்கள் பலரும் கூறு­கின்­றார்கள்.

யுத்தம் முடி­வ­டைந்த பின்னர், முள்­ளி­வாய்க்கால் பிர­தே­சத்தில் இருந்து, நந்­திக்­கடல் ஊடாக வந்­த­போதும், மறு­பக்­கத்தில் வட்­டு­வாகல் ஊடாக இரா­ணு­வத்­தி­ன­ரிடம் வந்­த­போதும், உயிர் தப்பி வந்­த­வர்கள், ஆங்­காங்கே சித­றிக்­கி­டந்த இறந்த உடல்­களில் இட­றிய வண்­ணமே வந்­த­தாகத் தெரி­வித்­துள்­ளனர். சில இடங்­களில் குவி­யல்­க­ளாக இறந்து கிடந்­த­வர்கள் மீது ஏறி வர நேர்ந்­த­தையும் இப்­போதும் எண்ணி கண்கள் குள­மக மனம் கலங்­கு­கின்­றார்கள்.

இது மட்­டு­மல்­லாமல் அகோ­ர­மாக நடத்­தப்­பட்ட ஷெல் தாக்­கு­தல்­களில் பலர் உடல் சிதறி இறந்து கிடந்த காட்­சி­களைக் கண்­ட­வர்­களும் குழந்­தைகள் பெண்கள், வயோ­தி­பர்கள் என அவர்கள் அலங்­கோ­ல­மாகக் கிடந்­ததைக் கண்­டதும், கைகால்கள் உடைந்து தொங்­கிய நிலை­யிலும், அவ­ய­வங்கள் இல்­லா­மலும் இரத்­தப்­பெ­ருக்­குடன் கிடந்­த­வர்­களைக் கண்ட பின்­னரும் என்ன செய்­வது என்று தெரி­யாமல் பேய­றைந்த நிலையில் அச்­சத்தில் மனம் இறுகிப் போயி­ருந்­த­போது, கையா­லா­காத நிலையில் தாங்கள், உயிர் தப்­பு­வ­தற்­காக அந்த இடத்­தை­விட்டுத் தட்டுத் தடு­மாறி வெளி­யேறி வந்­த­தையும் பலர் எண்ணிக் கலங்­கு­கின்­றார்கள்.

இவ்­வாறு முள்­ளி­வாய்க்­காலின் சோகங்­களைப் பல்­வேறு வழி­க­ளிலும் மன­துக்­குள்­ளேயே எண்ணிக் கலங்கி மருகித் தவிக்­கின்ற பாதிக்­கப்­பட்ட உள்­ளங்­க­ளுக்கு வெளிப்­ப­டை­யாக தங்­க­ளு­டைய சோகங்­களைப் பகிர்ந்து கொள்­ளவோ, இறந்­த­வர்­களை நினை­வு­கூர்ந்து அஞ்­சலி செலுத்­தவோ முடி­யாத நிலைமை­யா­னது மிகவும் மோச­மா­னது. தமிழ் மக்­க­ளுக்­கான மனித உரிமை மீற­லாகும் என்று தென்­னி­லங்­கையைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்­பாட்­டா­ள­ரா­கிய பெர்­னாண்டோ தெரி­வித்­துள்ளார்.

முள்­ளி­வாய்க்கால் அவ­லத்தின் ஆறாம் ஆண்டு நிறை­வ­டை­ய­வுள்ள நிலையில் இறந்­த­வர்­களை நினை­வு­கூர்ந்து அஞ்­சலி செலுத்­து­வ­தற்­கான உரிமை குறித்து தமிழ் சிவில் அமை­யத்­தினர் கடந்த வாரம் யாழ்ப்­பா­ணத்தில் கருத்­த­ரங்கு ஒன்றை நடத்­தி­யி­ருந்­தனர். 

இங்கு உரை­யாற்­றிய பலரும், இந்த உரிமை மறுக்­கப்­பட்­டி­ருப்­பதைக் கண்­டித்­துள்­ள­துடன், அந்த உரி­மையை விட்­டுக்­கொ­டுக்க முடி­யாது என்ற ரீதி­யிலும் கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருந்­தனர்.இறந்­த­வர்­களை நினை­வு­கூர்­வதைத் தடுத்­தி­ருந்­தது மட்­டு­மல்­லாமல், அந்த அவ­லச்­சா­வு­களின் அடை­யா­ளங்­க­ளையே அரச படை­யினர் இல்­லாமல் செய்­தி­ருப்­பது மோச­மான நட­வ­டிக்கை என்று அவர் சாடி­யி­ருக்­கின்றார்.ஆயுதப் போராட்­டத்தில் முன்னர் ஈடு­பட்­டி­ருந்த ஜே.வி.பி. மற்றும் புளொட், ஈபி­.ஆர்.­எல்.எவ்., டெலோ போன்ற தமிழ் ஆயுத அமைப்­புக்­களும், அரச படை­க­ளா­கிய இரா­ணு­வத்­தி­னரும், இறந்து போன தமது சகாக்­களை நினை­வு­கூ­ரவும், அவர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­தவும் இந்த நாட்டில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. 

ஆனால் யுத்த மோதல்­களில் கொல்­லப்­பட்ட விடு­த­லைப்­பு­லி­களின் உறுப்­பி­னர்கள் மற்றும் யுத்த மோதல்­க­ளிலும், குறி வைக்­கப்­பட்ட சிவில் இலக்­கு­க­ளிலும், இறுதி யுத்­தத்­தின்­போது மடிந்­து­போன தமிழ் மக்­க­ளையும் நினை­வு­கூர்­வதை முன்­னைய அர­சாங்கம் தடை செய்­தி­ருந்­தது. இந்த நாட்டில் இதன் மூலம் இறந்­த­வர்­களை நினை­வு­கூர்­வ­திலும் கூட அப்­பட்­ட­மாக பாகு­பாடு காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது என்று ருக்கி பெர்­னாண்டோ சாடி­யி­ருக்­கின்றார். யுத்­தத்தில் இறந்­து­போன பொது­மக்­க­ளையும் எல்.­ரி.ரி.யி.­ன­ரையும் நினை­வு­கூ­ர­வி­டாமல் தடுத்­தி­ருந்­த­மை­யா­னது தமிழ் மக்­க­ளுக்­கான உரிமை மீற­லாகும் என தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

யுத்த மோதல்­க­ளிலும் யுத்தச் செயற்­பா­டு­க­ளின்­போதும் மடிந்து போன தமது உறுப்­பி­னர்­களின் மர­ணத்தைப் புனி­த­மாகக் கரு­திய விடு­த­லைப்­பு­லிகள், அவர்­க­ளுக்­கென துயிலும் இல்­லங்கள் என்ற பெயரில் நிலை­யங்­களை அமைத்து அதனை மிகவும் பௌத்­தி­ர­மாகப் பேணி வந்­தார்கள்.

யுத்­தத்தில் வெற்­றி­கொண்ட இரா­ணு­வத்­தினர் அந்த மாவீரர் துயிலும் இல்­லங்­களை அடித்து நொறுக்கி புல்­டோ­சர்­களை விட்டு இடித்து அழித்­த­துடன், அந்த இடங்­களில் தமது முகாம்­க­ளையும் விளை­யாட்டு மைதா­னங்­க­ளையும் அமைத்து அவ­மா­னப்­ப­டுத்தும் வகையில் செயற்­பட்­டி­ருக்­கின்­றார்கள். அது மட்­டு­மல்­லாமல் ஏனைய நினைவுச் சின்­னங்­க­ளையும் அவர்கள் இல்­லாமல் உடைத்து அழித்­து­விட்டு, இரா­ணு­வத்­தி­னரின் நினைவுச் சின்­னங்­க­ளையும் அவர்­களின் வெற்றிச் சின்­னங்­க­ளையும் அமைத்­தி­ருக்­கின்­றார்கள். இது மோச­மான ஒரு நட­வ­டிக்­கை­யாகும் என்றும் ருக்கி பெர்­னாண்டோ சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

இறுதி யுத்­தத்­தின்­போது இடம்­பெற்ற துய­ர­மான சம்­ப­வங்கள் வெளியில் தெரி­ய­வந்­து­விடும் என்று இலங்கை அர­சாங்கம் அச்­ச­ம­டைந்­தி­ருந்­தது. இறந்­த­வர்­க­ளையும் அவர்கள் இறந்­து­போன அந்தச் சந்­தர்ப்­பங்­க­ளையும் மக்கள் நினை­வு­கூ­ரும்­போது உள்­நாட்டில் உள்­ள­வர்­க­ளுக்கும் வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கும் அங்கு என்ன நடந்­தது என்­ப­து­பற்­றிய உண்மை வெளியில் தெரி­ய­வந்­து­விடக் கூடாது என்­ப­தற்­கா­கவே அவ்­வாறு அர­சாங்கம் தடுத்­தி­ருக்க வேண்டும். அதே­நேரம் எல்.­ரி.ரி. யினர் மீண்டும் ஒன்­றி­ணை­வ­தற்­கான ஒரு சந்­தர்ப்­ப­மாக இவ்­வாறு நினைவு­கூர்­வது அமைந்­து­விடும் என்று அர­சாங்கம் எண்­ணி­யி­ருக்­கவும் கூடும் என ருக்கி பெர்­னாண்டோ தெரி­வித்­துள்ளார்.

பொது­வா­கவே அர­சாங்­க­மும்­சரி, ஜே.வி.பி., மற்றும் எல்­.ரி.ரி.ஈ. போன்­ற­வர்­களும் சரி, தாங்கள் இழைத்த தவறுகளை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்கவில்லை. அத்துடன் இவ்வாறான நினைவுகூர்தலின் மூலம் அந்தத் தவறுகள் நினைவுபடுத்தப்படுவதை அவர்கள் விரும்பியிருக்கவில்லை. அவைகள் அவ்வாறு வெளியில் வருவதைத் தடுப்பதற்கு அவர்கள் எதனையும் செய்வதற்குத் தயாராகவும் இருந்திருக்கின்றார்கள். 

குறிப்பாக கடந்த ஐந்து வருடங்களாக முன்னைய அரசாங்கம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வந்திருக்கின்றது. இது மிகவும் தவறானது. இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அவர்களுடைய உற்றார் உறவினர்கள் தனிப்பட்ட முறையிலோ அல்லது கூட்டாகவோ சமூக அடிப்படையிலோ நினைவுகூரும் உரிமை அவர்களுக்கு இருக்கின்றது. அதனைத் தடைசெய்ய முடியாது என்றும் ருக்கி பெர்னாண்டோ அடித்துக் கூறியிருக்கின்றார்.

நாட்டில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. நல்லாட்சி நிலவுவதாகக் கூறப்பட்டபோதிலும், யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூர்வது பற்றியோ அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது பற்றியோ புதிய அரசாங்கம் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இன்னும் எதனையும் தெரிவிக்கவில்லை. 

ஆயினும் கடந்த வருடம் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி விடுதலைப்புலிகளின் மாவீரர் தினத்தன்று சுடரேற்றி அஞ்சலி செலுத்தியது தொடர்பில் வடமாகாண உறுப்பினர் ரவிகரனை முல்லைத்தீவு பொலிசார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் விசாரணை செய்திருந்தனர். தமது தலைமையகத்தில்; இருந்து வந்த உத்தரவுக்கு அமைவாகவே ரவிகரனை தாங்கள் விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்ததாக பொலிசார் அவரிடம் கூறியிருந்தார்கள்.

அரச உயர் மட்டத்திலும், அதற்கு அடுத்த நிலைகளிலும் புதிய ஆட்சியில் சில மாற்றங்களைக் காணக்கூடியதாக இருக்கின்ற போதிலும், அடிமட்டத்தில் உள்ள படையினர், புலனாய்வாளர்களின் செயற்பாடுகளில் பெரிய மாற்றங்கள் எதனையும் காண முடியவில்லை. 

மே 18 ஆம் நாளாகிய முள்ளிவாய்க்கால் சோகத்தை நினைவுகூர்வதைத் தடுக்கும் நோக்கத்திற்காகவே மாவீரர் தினத்தன்று அஞ்சலி செலுத்தியதுபற்றி பல மாதங்களின் பின்னர் தன்மீது பொலிசார் விசாரணையை நடத்தியிருக்கலாம் என்று ரவிகரன் சந்தேகம் வெளியிட்டிருந்தார். புதிய ஆட்சியில் முள்ளிவாய்க்கால் சோகத்தின் நினைவேந்தலுக்கு என்ன நடக்கும் என்பது பதற்றம் நிறைந்த யோசனையாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு இப்போது அமைந்திருக்கின்றது.