Breaking News

பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் இலங்கை பயணம் கடைசி நேரத்தில் ரத்து

பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் இன்று இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்து ஐந்து நாள் பயணம், கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் இன்று பேருந்து ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 47 பேர் பலியான சம்பவத்தை அடுத்தே, பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் இந்தப் பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் இராணுவத்தின் சார்பில் மேஜர் ஜெனரல் ஆசீம் சலீம் பஸ்வா, தனது ருவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கை இராணுவத் தளபதியின் அழைப்பின் பேரில், பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் இன்று பிற்பகல் கொழும்பு வரத் திட்டமிட்டிருந்தார். கராச்சித் தாக்குதலை அடுத்து அவரது பயணம் கடைசி நேரத்தில் கைகூடாமல் போயுள்ளது.

ஏற்கனவே, பாகிஸ்தான் இராணுவத் தளபதியி்ன் இலங்கை பயணம், வரிசிஸ்தான் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையால் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.