ரணில் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர மஹிந்த கூட்டத்தினர் திட்டம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மகிந்த ராஜபக்ஷ அணியினர் பிரதமர் ரணில் விக்கி ரமசிங்கவுக்கும் அவரது அரசுக்கும் எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதோடு, உடனடியாக இந்த அரசைக் கலைக்கவேண்டு மெனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
தினேஷ்குணவர்தன, விமல் வீரவன்ஸ தலைமையிலான இந்த மகிந்த சார்பு அணியினர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை குருணாகலில் நடத்திய மகிந்த ஆதரவுக் கூட்டத்தின்போது இந்த முடிவை அறிவித்திருக்கின்றனர். இந்த அணியில் 57 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்திருக்கின்றனர்.
கடந்த ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றதையடுத்து அமைக்கப்பட்ட 100நாள் அரசின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டு நல்லாட்சி உருவாக்கப்பட்ட அன்றே 100 நாள் முடிவில் ஏப்ரல் 23 ஆம் திகதியுடன் பாராளுமன்றம் கலைக்கப்படுமென அறிவிக்கப்பட்ட நிலையில், பிரதமர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி இன்றுவரை பாராளுமன்றத்தைக் கலைக்குமாறே வலியுறுத்தி வருகின்றது.
எனினும், எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தேர்தல் மறுசீரமைப்பு குறித்த 20 ஆவது அரசியலமைப்பை நிறைவேற்றியதன் பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படவேண்டுமெனக் கூறிவருகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையிலேயே தினேஷ், வீரவன்ஸ உள்ளிட்ட 57 பேர் ரணிலின் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவும். அரசாங்கம் உடன் கலைக்கப்படவேண்டுமெனவும் வலியுறுத்திவருகின்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில்விக்கிரமசிங்கவுடன் இணைந்தே தொடர்ந்து ஆட்சியை முன்னெடுப்பதில் அக்கறைகாட்டி வருகின்றார். சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவதில் அவர் ஆர்வம் காட்டினாலும், அடுத்து வரக் கூடிய அரசு எல்லாத்தரப்புகளையும் உள்வாங்கிய தேசிய அரசு அமைப்பதில் மைத்திரிபாலவும், ரணிலும் ஒத்த நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் எதிர்வரும் 19 ஆம் திகதி தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டுவருகின்றது. 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட கையோடு, இம்மாத இறுதிக்குள் பாராளுமன்றம் கலைக்கப்படக்கூடிய சாத்தியங்களே அதிகமாகக் காணப்படுகிறது.
அவ்வாறு பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் தினேஷ், விமல் போன்றோரின் நம்பிக்கையில்லா பிரேரணை புஸ்வாணமாகிவிடும் நிலையே ஏற்படலாம்.
இதேபோன்றுதான் 19 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டபோது அதனைத் தோற்கடிப்பதற்காக பல்வேறுபட்ட உள்ளக நாடகங்கள் இடம்பெற்றன. இறுதியில் எல்லாம் பிழைத்துப்போன நிலையில் கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் ஒரு எம்.பியைத் தவிர எல்லோரும் ஆதரவாக கையுயர்த்திவிட்டனர். சுதந்திரக் கட்சியில் ஜனாதிபதியின் உறுதியான நிலைப்பாடே இதற்குக் காரணமாக அமைந்தது.
இந்த ரீதியில் ரணில் அரசு மீதான நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஅரசு தோற்கடிக்கப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டார் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் ஐக்கிய மக்கள சுதந்திர முன்னணி சிதறுண்டுபோகும் நிலையே வெளிப்படையாக காணப்படுகிறது. சுதந்திரக்கட்சியிலும் வெடிப்பு ஏற்பட்டிருப்பதை தெளிவாகவே காணமுடிகிறது. அவ்வாறான நிலையில் தேர்தலொன்று நடக்கும் பட்சத்தில் அது பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதகமாக அமையும் என்பதே அவதானிகளின் கருத்தாக உள்ளது.
எனினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அவரது ஐக்கிய தேசியக் கட்சியும் விழிப்புடன் செயற்படவேண்டிய அவசியமும் காணப்படுகிறது. ஏனெனில் ஐக்கிய தேசியக் கட்சியின் கைகளில் இன்றிருப்பது 50இற்கும் குறைவான உறுப்பினர்களே. இதனை இரண்டுக்கு மேற்பட்ட மடங்காக அதிகரித்துக்கொண்டால் மாத்திரமே அக்கட்சியால் ஆட்சியைக் கைப்பற்றிக்கொள்ளமுடியும். மீண்டும் ரணில் தலைமையிலான தேசிய அரசு அமைவதற்கு இந்தப் பெரும்பான்மை மிக முக்கியமானதென்றே அரசியல் விமர்சகர்களும், அவதானிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.








