அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து புதிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை!
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் புதிய அரசு இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என்பது மிகப் பெரிய தவறாகும் என்று கடந்த வருடம் விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மூன்று தமிழர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
2014 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட சந்திரலிங்கம் குசாந்தன், செல்லத்துரை கிருபாகரன், செல்லத்துரை மகாதேவன் ஆகியோர் சட்டத்துக்கு முறைகேடான வகையில் இலங்கைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உளவினர்கள் தெரிவிக்கின்றனர்.
மலேசியாவில் ஐ.நா.வின் அகதி அந்தஸ்து வெற்றிருந்த இந்த மூவரையும் அந்நாட்டு அரசு சட்டவிரோதமாக 2014 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தியது. ஐ.நா. சபையும் மேலும் பல சர்வதேச நாடுகளும் புலம் பெயர் தமிழ் அமைப்புகளும் இவர்களை இலங்கைக்கு நாடு கடத்தினால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனத் தெரிவித்தும் மலேசிய அரசு நாடு கடத்தியிருந்தது.
இந்நிலையில் மகஸின் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இம் மூவரும் சித்திரவதைக்குள்ளாகியுள்ளதாக, இவர்களைத் தொடர்புகொண்ட உறவினர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். அத்துடன், இம் மூவரும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்த வகையிலும் தொடர்பு பட்டிருக்கவில்லை எனவும் உறவினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இம்மூவரும் கடந்த புதன்கிழமை கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது எந்தவித ஆக்கபூர்வமான முடிவையும் நீதிமன்றம் வழங்கவில்லை என்றும் இவர்களின் வழக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் வெசாக் தினத்தன்று அயிரத்து 400 கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் இலங்கை அரசு விடுவித்திருந்தது. இதில் ஒரு தமிழ் அரசியல் கைதிகூட விடுவிக்கப்படவில்லை. மலேசியாவில் அகதி அந்தஸ்து இருந்தும் சட்ட விரோதமாக தடுத்து வைத்துள்ள மூன்று கைதிகளையும் விடுவிக்காமல் குடு கடத்தியவர்கள் மற்றும் கொலை செய்தவர்களை புதிய நல்லாட்சி அரசு விடுவித்திருப்பது அதிர்ச்சியளிக்கின்றது என மேற்படி மூன்று கைதிகளும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த மூன்று கைதிகளின் உயிருக்கும் ஏதும் ஆபத்து ஏற்படுமாயின், அதற்கு இலங்கை அரசும் மலேசிய அரசுமே பொறுப்புக் கூறவேண்டும் என்றும் இவர்களுடன் சேர்த்து சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க புதிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உறவினர்கள் வலியுறுத்துகின்றனர்.