சம்பூர் காணியை கையகப்படுத்துவதற்கு நீதிமன்றம் தடை
சம்பூர் பிரதேசத்திலுள்ள காணி ஒன்றை அரசாங்கம் கையகப்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட வர்த் தமானி அறிவித்தலை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
2012ம் ஆண்டு இந்த காணியை அரசாங்கம் முதலீட்டு சபையின் அபிவிருத்தி திட்டமொன்றிற்காக வழங்கியிருந்தது. புதிய ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவியேற்ற பின்னர் சம்பந்தப்பட்ட காணியுடன் கூடிய பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என பிரதேச அரசியல்வாதிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதற்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் தலையிட்டு குறித்த காணியை மீண்டும் மக்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
808 ஏக்கருடன் கூடிய இந்த காணியை மீண்டும் பொறுப்பேற்று மீள்குடியேற்றம் செய்வதற்கு எதிராக சம்பந்தப்பட்ட நிறுவனம் மனுத்தாக்கல் செய்ததையடுத்து, 5 அமைச்சுக்களின் செயலாளர்கள் அடங்கிய குழுவொன்று இவ்விடயம் தொடர்பில் கண்காணித்த வந்தது.
இதன் பின்னர் விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அந்த காணியை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது. 808 ஏக்கர் காணியில் மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், அதற்கருகிலுள்ள 214 ஏக்கர் காணியையும் இவ்வாறு கையகப்படுத்தி அதிலும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள போவதாக அமைச்சர் சுவாமிநாதன் கூறியுள்ளார்.
குறித்த 214 ஏக்கர் நிலத்தில் தற்போது கடற்படை முகாம் உள்ளது. முகாம் அமைந்துள்ள காணியை திரும் பெறுவதில் தாமதம் ஏற்படுவதன் காரணமாக முதலீட்டு சபையிடமிருந்து திரும்ப பெற்ற காணியில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதபடுத்த இருப்பதாகவும் அமைச்சர்
இதனை சவாலுக்குட்படுத்தி சம்பந்தப்பட்ட நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்திருந்தது. தான் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய எதிர்பார்த்துள்ளதாக அந்த நிறுவனம் நீதிமன்றத்தில் கூறியது. முதலீட்டு சபையில் இந்த அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக சீனித்தொழிற்சாலை, உர உற்பத்தி, மின்சார உற்பத்தி வாகனங்களை பொருத்தும் தொழிற்சாலை உள்ளிட்டவை மேற்படி காணியில் நிர்மாணிக்கப்படவிருந்ததாக மனுதாரர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அத்துடன் நேரடியாக ஐயாயிரம் தொழில்வாய்ப்புகளும், மறைமுகமாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கும் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் என அந்த மனுவில் கூறப்பட்டது. வாதங்களை கவனத்தில் எடுத்து கொண்ட உயர் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட காணியை கையகப்படுத்தும் இவ்வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த தீர்மானித்தது.
அத்துடன் வழக்கை தொடர்ந்து நடத்த உத்தரவிட்ட நீதிமன்றம் காணி கையகப்படுத்தப்படுவது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைக்குமாறு அரச சட்டத்தரணிக்கு அறிவித்தது.