புலம்பெயர் தமிழர் விழா புலிக்கொடியின் கீழ் நடைபெற்றால் பிரச்சினையாம்! என்கிறார் ராஜித
புலம்பெயர் அமைப்பு தமிழர் விழாவை விடுதலைப் புலிகளின் கொடியின் கீழ் நடத்த அனுமதியோம். ஆனால் அந்த விழா சிங்கக்கொடியின் கீழ் நடத்தப்படுமாயின் பிரச்சினையில்லை – இவ்வாறு தெரிவித்தார் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பு இன்று வியாழக்கிழமை காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. லண்டனில் நடைபெற்ற புலம்பெயர் அமைப்புகளுடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நடத்திய பேச்சு குறித்து இதன்போது ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
லண்டனில் நடைபெற்ற வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடான சந்திப்பின்போது புலம்பெயர் அமைப்புகள் இலங்கையில் ஒரே ஆட்சியை ஏற்படுத்துவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளன. அவர்களின் சிந்தனையில் மாற்றம் ஏற்படும்போது அதனை ஏற்க நாங்கள் மறுப்பு தெரிவிக்கலாமா? என்று தெரிவித்தார்.
இதேவேளை புலம்பெயர் மாநாட்டை நடத்தும் திட்டம் அரசாங்கத்தின் யோசனையிலேயே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதா என இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, அப்படியொரு யோசனை அமைச்சரவையிலும்கூட முன்வைக்கப்பட்டிருக்கவில்லை. அவ்வாறு முன்வைக்கப்பட்டிருந்தால் அது குறித்து விரிவாக வினா எழுப்பியிருப்போம். ஆராய்ந்திருப்போம். தேசியக் கொடியின் கீழ் மாநாடுகளை நடத்த அனுமதி வழங்கலாம். ஆனால் விடுதலைப் புலிகளின் கொடியைப் பயன்படுத்தி மாநாடுகளை நடத்த சிலர் எண்ணினாலும் நாங்கள் அனுமதி அளித்திடுவோமா?
பல தரப்பினரிடையே பேச்சு நடத்துவது நன்று. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபக்சவும்கூட விடுதலைப் புலிகளின் தலைவருடன் தொடர்ச்சியாக பேச்சு நடத்தியிருந்தார். முன்னாள் ஜனாதிபதிகளும் அவருடன் பேச்சு நடத்தினார்கள். இறுதியில் அவர் இணங்காதததினால்தான் யுத்தத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
அதுபோலவே புலம்பெயர் அமைப்புகளுடன் பேச்சு நடத்தப்பட்டது. எனினும் பேச்சு நடத்தியதற்காக அவர்களின் அனைத்து வேண்டுகோளுக்கும் தலைசாய்க்க வேண்டும் என்றதில்லை – என்றார்.








