Breaking News

"அம்மா திட்டங்களில் ‘சும்மா’ திட்டம்தான் சூப்பர் !”

'கருணாநிதி தன் 92-வது பிறந்த நாள் விழாவில், 'எதிர்காலத்தில் ஸ்டாலினுக்கு முக்கியமான  பொறுப்பு காத்திருக்கிறது’ என சூசகமாகச் சொன்னதுதான் இன்று வாட்ஸ்அப் டிரெண்டிங்...’ என பேச்சை ஆரம்பித்தால், ''அட என்னப்பா வாட்ஸ்அப் இது! எதை அழுத்தினாலும் சக்கரம் சுத்திட்டே இருக்கு. உடனே படம் வந்து நிக்க மாட்டேங்குது. இதெல்லாம் நமக்கு ஆகாது''
 என மொபைல் லோடிங் தாமதத்தை, தன் உடல்மொழியில் பிரதிபலிக்கிறார் துரைமுருகன். அதே உற்சாகத்தை கேள்விக்கான ஒவ்வொரு பதிலிலும் பார்சல் செய்வது துரைமுருகன் ஸ்பெஷல்! 

''கருணாநிதி போல ஜெயலலிதாவும் ஐந்து முறை முதலமைச்சராகிவிட்டார் என உற்சாகமாக இருக்கிறதே அ.தி.மு.க முகாம்?''
''என்னமோ அந்த அம்மா எலெக்ஷன்ல போட்டி போட்டு அஞ்சு தடவை முதலமைச்சரான மாதிரி கேட்கிறீங்களே! அந்த அம்மா அஞ்சாவது தடவை முதலமைச்சரா பதவியேத்துக்கிட்டதும் எங்க தலைவர் அஞ்சு தடவை முதலமைச்சரா இருந்ததும் ஒண்ணா? கலைஞர் அஞ்சு தடவையும் தேர்தல்ல போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சர் ஆனார். அவங்க அப்படியா? முதல்ல தேர்தல்ல ஜெயிப்பாங்க. அப்புறம் நீதிமன்றம் பதவியைப் பறிக்கும். பின்னாடி இவங்களே பதவியேத்துக்கிட்டு 'அஞ்சாவது தடவை முதல்வர்’ம்பாங்க. அப்புறம் இடைத்தேர்தல்ல போட்டியிடுவாங்க. ஜெயிச்சுக்குவாங்க. இப்படில்லாம் பண்ணா, ஒருத்தர் 10 தடவைகூட முதலமைச்சர் ஆகலாம். இதெல்லாம் சாதனையா? அடப் போங்கப்பு.''
''ஆனால், ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதையே புறக்கணிக்கிறதே தி.மு.க., அது ஏன்?''
''இதுக்கு ஆயிரம் தடவை விளக்கம் சொல்லிட்டோம். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருஷம்தான் இருக்கு. அதுக்குள்ள இடைத்தேர்தல் வைக்கிறதே தப்பு. இதுல 'ஏன் போட்டி போடலை?’னு வேற விசாரிக்கிறாங்க. எங்க நேரத்தையும் உழைப்பையும் வீணாக்க விரும்பலை.
சரி... எங்ககிட்ட திரும்பத் திரும்ப இந்தக் கேள்வியைக் கேட்கிறீங்களே... நாங்க ஆட்சியில இருந்தப்போ அஞ்சு இடைத்தேர்தல்ல அ.தி.மு.க போட்டியே போடலை. அதைப் பத்தி அந்த அம்மாகிட்ட கேட்டீங்களா?''
''பொது வேட்பாளரா டிராஃபிக் ராமசாமி ஆதரவு கேட்டாரே... அவரையாவது ஆதரிச்சிருக்கலாமே?''
''அதை எங்க கட்சித் தலைவர் முடிவுசெய்வார்.''
'' 'கலைஞரே இன்னும் முதலமைச்சர் கனவில் இருக்கிறார்’னு சொல்றாரே பா.ம.க ராமதாஸ்?''
''கலைஞர் முதலமைச்சர் கனவில் இருக்காரோ இல்லையோ, ராமதாஸ் அவரோட மகன்
அன்புமணி முதலமைச்சர் ஆகிடுவாருங்கிற கனவுல இருக்கார். கனவு காண்றதுக்குக் கட்டுப்பாடு இருக்கா என்ன? கண்டுட்டுப் போகட்டுமே!''

''ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்றதும் அரசு இயந்திரம் இயல்புக்குத் திரும்பிவிட்டதா?''
''டி.வி-யில் ஓர் அறிவிப்பு பார்த்தேன். 'ஜூன் 12-ம் தேதி, மேட்டூர் அணை திறக்கப்பட மாட்டாது. முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு’! இதுக்குப் பேர் அறிவிப்பா? 'இன்ன தேதியில்
திறப்போம்’னு சொன்னா, அது அறிவிப்பு. என் இத்தனை வருட அரசியல் அனுபவத்தில், ஒரு முதலமைச்சர் இப்படிச் சொல்வதை இப்போதான் பார்க்கிறேன். இதுக்கு மேலயும் சில விஷயங்கள் இருக்கு. அதைச் சொன்னா சங்கடமா இருக்கும்.''
''ஆக்கபூர்வமான விமர்சனம்னா சொல்லலாமே! அதுல யாருக்கு என்ன சங்கடம்?''
''தமிழ்நாடு அரசின் அமைச்சர்களுக்குத்தான்! அ.தி.மு.க அமைச்சரவையில் பலர் படித்தவர் களாகவும் திறமைசாலிகளாகவும் இருக்கலாம். ஆனா, அவங்களை வேலை செய்யவிட்டால்தானே! எதுக்கெடுத்தாலும் கும்பிடு போட்டுட்டு, 'அம்மா... அம்மா...’னு ஜெபிச்சுட்டே இருந்தா போதுமா?

எங்க அமைச்சரவை எப்படிச் செயல்படும் தெரியுமா? 'முதலமைச்சர் பார்வைக்கு’னு நான் அனுப்பிய பல கோப்புகளில் கலைஞர் என் கருத்தை மறுத்து எழுதுவார். நான் உடனே போய் விளக்கம் கொடுப்பேன். அதுல சமாதானமாகி, 'பொதுப்பணித் துறை அமைச்சரின் கோரிக்கை ஏற்கப்பட்டது’னு எழுதி, கையெழுத்து போடுவார். ஒருவேளை நான் சொல்றது சரியில்லைனா, அவர் நினைச்சதை எழுதி விவகாரத்தை முடிப்பார். அப்படி  இப்போ எந்த விவாதமும் நடக்கிறது இல்லையே!
கேபினெட் மீட்டிங்குகளில் கலைஞர் அளவுக்கு அமைச்சர்களைப் பேசவிட்டவர் யாருமே இல்லை. சண்டை போட்டு அனுமதி வாங்குவோம். எல்லாத்தையும் கவனிப்பார். ஒவ்வொரு பிரச்னை பத்தியும் அரை மணி நேரமாவது விவாதிப்போம். அப்படி இந்த ஆட்சியில் விவாதம் நடக்குமா என்ன? அஞ்சு நிமிஷத்துக்குள்ள கேபினெட் மீட்டிங்கே முடிஞ்சிடுதுன்னா, அங்கே என்ன நிர்வாகம் நடக்கும்? அமைச்சர்கள் கொலு பொம்மைகளாக இருக்காங்க... சட்டமன்றம், அவங்க கட்சித் தலைவர் புகழ் பாடும் மன்றமா இருக்கு!''
''ஆனா, அ.தி.மு.க-வில் சாதாரண ஒரு தொண்டன்கூட மந்திரியாகக்கூடிய சூழல் இருக்கு. தி.மு.க சார்பா தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறதே அபூர்வமா இருக்கே?''
''அ.தி.மு.க தொண்டன் மந்திரியாகிட்டா, தினம் பேசுற நாலைஞ்சு பேர்கிட்டகூட பேச்சைக் குறைச்சுக்குவான். அதுல கட்சிக்கும் ஆட்சிக்கும் என்ன நல்லது நடந்திரும்? ஆனா தி.மு.க-வுல, இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறதுக்கு 18 பிரிவுகளாவது இருக்கும். அதைத் தவிர தேர்தல்களிலும் கணிசமான இடம் கொடுப்போம். தேர்தல்னு வரும்போது ஜெயிக்கிற வேட்பாளரைத்தான் எந்தக் கட்சியும் நிறுத்தும். இதை, ’Winning candidates are important than deserving candidatess' -னு வெள்ளைக்காரன் சொல்வான். அப்படிச் சொன்னாத்தானே இங்கே இருக்கிறவங்க கேட்டுக்குவாங்க. வெற்றி வாய்ப்பு உள்ள வேட்பாளர்தான் தேர்தல்ல ஒரு கட்சிக்கு முக்கியம். அதனால புது முகங்கள், பழைய முகங்கள் கலந்துதான் வேட்பாளர் பட்டியல் இருக்கும்; இருக்கணும்.''
''கருணாநிதி தன் பிறந்த நாள் உரையில், 'மாநில அரசுகளை மதிக்காமல் செயல்பட்டால் விடுதலை கோஷத்தை எழுப்புவோம்’ என்கிறாரே. ஆளும் கட்சியாக இருக்கும்போது அண்ணா வழி... எதிர்க்கட்சியாக இருக்கும்போது பெரியார் வழி... இதுதான் தி.மு.க கொள்கையா?''
'' 'மத்திய அரசு, மாநில அரசுகளை மதித்துச் செயல்படணும்’னு அவர் சொல்லியிருக்கார். ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ எப்பவும் எங்களுக்கு பெரியாரும் அண்ணாவும் முக்கியம். நாங்கள் ஆட்சியில் இருந்தப்போதான், 'அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’னு சட்டம் கொண்டுவந்தோம். பெண்களுக்கு சொத்துரிமை கொண்டுவந்தோம்; அப்போ என்ன பெரியாரை விட்டுக்கொடுத்துட்டோமா?''
''ஆனா, தாலி சர்ச்சை, ஐ.ஐ.டி-யில் 'பெரியார்-அம்பேத்கர் வாசிப்பு வட்டத்துக்குத் தடை’ போன்ற விவகாரங்களில் தி.மு.க அடக்கியே வாசிக்கிறதே?''
''கச்சேரியில எந்த இடத்தில் உச்சஸ்தாயியில் பாடணும்... எந்த இடத்தில் அடக்கி வாசிக்கணும்னு தி.மு.க-காரனுக்கு நல்லாவே தெரியும். எங்களுக்கு வேகம் - விவேகம்... ரெண்டும் கைவந்த கலை.''
'''சமீப வருடங்களில் தமிழ்நாட்டுக் கிராமங்களில் முன்னெப்போதைக் காட்டிலும் சாதி மோதல்கள் அதிகரித்திருக்கின்றனவே?''
''இந்தியா முழுக்கவே அந்தப் பிரச்னை இருக்கு. தமிழ்நாட்லதான் அது கம்மியா இருந்தது. இப்போ இங்கேயும் அதிகரிச்சிருச்சு. இன்னும் ரெண்டு பெரியார், அம்பேத்கர் இங்கே தேவை.''

''மோடியின் ஓர் ஆண்டு கால ஆட்சியில் என்ன நடந்திருக்கு?''
''ஒண்ணுமே நடக்கலைனு ஊர் முழுக்கப் பேச்சு இருக்கு. அதை நான் வழிமொழிகிறேன். மோடி உலகம் முழுக்கப் போகிறார். போற வழியில நம்ம ஊரையும் பார்த்துட்டுப் போறார்... அவ்ளோதான்.''
''தமிழ்நாட்டில் செயல்பாட்டில் இருக்கும் 'அம்மா திட்டங்களில்’ உங்களைக் கவர்ந்த திட்டம் எது?''
''அமைச்சர்கள் 'சும்மா’ இருக்கும் திட்டம்தான்.''
''சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றம் மூலமாக ஜெயலலிதாவை முடக்கப் போராடுகிறதே தி.மு.க. ஏன் அவரை மக்கள் மன்றத்தில் எதிர்கொள்ளத் தயங்குகிறீர்கள்?''
''இதில் தயங்க என்ன இருக்கு? அடுத்த தேர்தல்ல மக்கள் மன்றத்துலயும் வீழ்த்திருவோம்.''
''கூட்டணிக் கட்சிகளை அ.தி.மு.க மதிக்காது என்றபோதிலும், அவர்களோடு கூட்டணி சேர பல கட்சிகள் ஆர்வம் காட்டுகின்றன. தி.மு.க-வுடன் அப்படி கூட்டணி வைக்க யார் தயாராக இருக்கிறார்கள்?''
''வேற கேள்வி கேளுங்க.''
''தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகளை விஜயகாந்த் ஒன்றிணைத்து டெல்லிக்கு அழைத்துச் சென்றது பற்றி...''
''முடிஞ்சதை விட்ருங்க. எதிர்க்கட்சிகள் சேர்ந்து டெல்லிக்குப் போனாங்க. அவ்வளவுதான்.''

'' 'எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் ஆட்சியில் பங்கு வேண்டும்’ என்கிறாரே தொல்.திருமாவளவன்?''
''அது அவர் கருத்து. அதில் நான் சொல்ல என்ன இருக்கிறது? அவர் ஒரு கட்சி நடத்துகிறார்; அவர் நினைப்பதைச் சொல்லும் உரிமை அவருக்கு உண்டு.''
''எப்போதும் பளிச்சென இருக்கிறீர்களே... ஒரு நாளைக்கு எத்தனை சட்டைகள் மாற்றுவீர்கள்?''
''காலையில ஒண்ணு... சாயங்காலம் ஒண்ணு! கைத்தறித் துணிங்கிறதால சட்டுனு கசங்கிடும். அதனால அடிக்கடி மாத்தவேண்டியிருக்கு. மத்தபடி வண்டியில எக்ஸ்ட்ரா உடைகளை வெச்சுக்கிட்டு ஃபேஷனுக்காக மாத்திக்கிற ஆளு இல்லை நான்.''

''கடைசியா எந்த சினிமா பார்த்தீங்க?''
''கொஞ்ச நாள் முன்னாடி ஒரு படம் பார்க்கப் போனேன். பேர்கூட ஞாபகம் இல்லை. ஒரே சத்தம். முடியலை! இப்போலாம் டி.வி-யில சீரியல்கூடப் பார்க்கிறது இல்லை. தலைவர்கூட இருந்தா 'ரோமாபுரி பாண்டியன்’ பார்ப்பேன்... அவ்வளவுதான்.''
''உங்களுக்கு அப்பா, அம்மா வெச்ச பேரே துரைமுருகன்தானா?''
''அப்பா வெச்ச பேரு முருகன்தான். என் ஊர் காங்குப்பம். அப்பா பேர் துரைசாமி. இரண்டையும் இனிஷியல் ஆக்கினா இங்கிலீஷ்ல 'K.D.Murugan' -னு வந்துச்சு. அப்பா பேரை மட்டும் வெச்சுக்கலாம்னு பார்த்தா, 'து.முருகன்’னு இடக்கா இருந்துச்சு. 'எதுக்குடா வம்பு?’னு 'துரைமுருகன்’னு நானே பேரை மாத்திக்கிட்டேன். ஆக, முருகன்தான் என் இயற்பெயர். ஏன், அதுல எதுவும் பிரச்னையா உங்களுக்கு?!''