Breaking News

ஐ.நா பொதுச்செயலருக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுகிறார் மைத்திரி

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என்று ஐ.நா பொதுச்செயலருக்கு அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.

வரும் செப்ரெம்பர் மாதம் 15 ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில், இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதற்கு முன்னதாக, இலங்கையில் பொறுப்புவாய்ந்த புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்று அனைத்துலக சமூகம் எதிர்பார்ப்புக் கொண்டுள்ளது. அண்மையில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்த ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் இதுகுறித்து வலியுறுத்தியிருந்தார்.

அதற்கு இலங்கை ஜனாதிபதி, வரும் செப்ரெம்பரில், ஜெனிவாவில் கூட்டம் ஆரம்பமாகும் போது, இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியில் இருக்கும் என்றும், புதிய அரசின் பிரதிநிதிகளுடன் தாமும் ஜெனிவா கூட்டத்தொடரில் பங்கேற்பேன் என்றும் ஐ.நா பொதுச்செயலருக்கு வாக்குறுதி அளித்திருந்தார் சிறிலங்கா அதிபர்.

அத்துடன், கடந்த மாதம் இலங்கை வந்த அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியும், செப்ரெம்பர் மாத ஜெனிவா அமர்வுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.

இந்தநிலையிலேயே, செப்ரெம்பர் 01ஆம் நாள் புதிய நாடாளுமன்றத்தைக் கூட்டும் வகையில், ஓகஸ்ட் 17ஆம் நாள் தேர்தலை நடத்த இலங்கை ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.