Breaking News

ஜனாதிபதி மைத்திரியை முதல்வர் சாடக் கூடாது

வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் அண்மைக்கால உரைகள் வித்தியாச மானவையாக இருப்பதைக் காணமுடிகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அதீதமாகச் சாடுகின்ற போக்கை வடக்கின் முதலமைச்சர் கொண்டுள்ளார்.  இது எதற்கானது? என்பது தெரியவில்லை. மைத்திரிபால சிறிசேன இந்த நாட்டின் ஜனாதிபதியான பின்பு தமிழர்களின் விடயத்தில் பெரிதான மாற்றங்கள் ஏற்படவில்லை என்பது உண்மை. 

 இந்த உண்மையை முதல்வர் விக்னேஸ்வரன் கூறிவருகின்றாராயினும், மைத்திரி ஜனாதிபதியாகப் பதவி ஏற்று நான்கு மாதங்களே நிறைவடைந்துள்ள நிலையில், அவர் பெரியதாக எதனையும் செய்து விட முடியாது என்ற யதார்த்தத்தையும் கருத்தில் கொண்டே குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டும்.

எழுந்தமானமாக-யதார்த்தத்திற்குப் புறம்பாக ஜனாதிபதி மைத்திரி எதுவும் செய்யவில்லை என்று வடக்கின் முதல்வர் குற்றம் சுமத்தும் போது அது தொடர்பில் சர்வதேச சமூகமும் ஒரு கருத்து நிலையைக் கொண்டிருக்கும்.  மிக மோசமானவராக இருந்த மகிந்த ராஜபக்­ மீது சுமத்திய அதே குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதி மைத்திரி மீதும் சுமத்தும் போது, இது தமிழர்களின் வழமை என்றொரு நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்திடம் ஏற்படுத்தி விடும். 

ஜனாதிபதி மைத்திரியை பொறுத்தவரை அவர் தனக்கு இருக்கக்கூடிய அதிகாரத்தையே குறைப்புச் செய்தவர். இது மைத்திரிக்கு சர்வதேசத்திடம் ஒரு நல்ல மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்நிலையில் எதற்கு எடுத்தாலும் ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சியும் பிரயோசனம் அற்றது என வடக்கின் முதலமைச்சர் கூறும் போது, வடக்கின் முதல்வர் மீது சர்வதேசம் வைத்துள்ள மரியாதையிலும் பழுதை ஏற்படுத்திவிடும்.

அதேநேரம் வடக்கு மாகாண அரசின் இயங்கு நிலை போதாதென்ற கருத்து தமிழ் மக்கள் மத்தியில் தாராளமாக உண்டு. எனவே முதலில் அந்தக் குறைபாடுகளை நிவர்த்திக்க வேண்டும்.  இதுதவிர, முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது பிரதமர் ரணில் கொண்டுள்ள எதிர்ப்பு நிலையில் ஜனாதிபதி மைத்திரியோடு நல்லதொரு உறவை முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஏற்படுத்திக் கொள்வதே சிறந்த இராஜதந்திரமாகும்.

இதைவிடுத்து ஜனாதிபதி மைத்திரியையும் எதிர்மறையாக விமர்சிக்கும் போது; இதற்காகத்தான் நான் முதல்வர் விக்னேஸ்வரனுடன் கதைக்கவில்லை என்று பிரதமர் ரணில், ஜனாதிபதி மைத்திரிக்குக் கூறுவார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணிலின் முடிவு சரியானது என்றொரு நினைப்பை ஜனாதிபதி மைத்திரியும் எடுத்துக் கொள்ளலாம். அதேநேரம் வடக்கின் முதல்வருக்கு எதிராகச் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சில உறுப்பினர்களுக்கும் இத்தகையதொரு நிலைமை சாதகமாகி விடும்.

இதற்கு அப்பால், மகிந்த ராஜபக்­ ஜனாதிபதியாக இருந்து போது மகிந்தவை இப்படி எல்லாம் விமர்சிக்காத முதல்வர் விக்கி மைத்திரியை விமர்சிப்பது ஏன்? மகிந்தவை மீண்டும் அரசியலுக்குக் கொண்டுவர முற்படும் வாசுதேவ நாணயக்காரவுக்கு சார்பாகவா? என்ற கேள்வி எழுந்தால் அது தமிழர்கள் மத்தியிலேயே மிக மோசமான விமர்சனத்தை முதல்வருக்கு ஏற்படுத்தி விடும். ஆகையால் ஜனாதிபதி மைத்திரியை குறை கூறுவதை வடக்கின் முதல்வர் தவிர்க்க வேண்டும்.