Breaking News

வித்தியா வழக்கில் இடத்தை பார்வையிட்ட சட்டத்தரணி!


மாணவி வித்தியா படுகொலை வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று காலை விசாரணைக்கு எடுக்கப்பட்டதோடு, வழக்கில் காலத்தை நீடிக்காமல் குற்றவாளிகளுக்கு தக்க தண்டணை வழங்குமாறு சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும் இப்படுகொலையில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிர்வரும் 15ம் திகதி வரையில் விளக்கமறியல் நீடித்து ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் 15.06.2015 ம் திகதி வரையில் விளக்கமறியல் நீடித்து ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேற்படி சந்தேகநபர்கள் ஒன்பது பேரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வழக்கை சுமார் 1 மணி நேரம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி லெனின் குமார், சந்தேகநபர்களை 15.06.2015 ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பிலான சான்றுப் பொருட்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன். 

இன்றைய தினம் வித்தியா குடும்பத்தின் சார்பில் 6 வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்தனர். வித்தியாவின் குடும்பம் சார்பாக ஆஜராகிய பிரபல சிரேஷ்ட சட்டத்தரணி கே,வி.தவராசா, இன்று காரசாரமான கேள்விகளை தொடுத்திருந்தார். 

இதில் ஒன்பதாவது சந்தேகநபரான சுவீஸ் குமார் என்றழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு பின்னர் எவ்வாறு கொழும்புக்கு தப்பிச் சென்றார்? அவரை வெள்ளவத்தை பொலிசார் என்ன குற்றத்திற்காக பின்னர் கைது செய்தனர் போன்ற கடுமையான கேள்விகளை சிரேஷ்ட சட்டத்தரணி தவராசா நீதிமன்றில் எழுப்பியிருந்தார். 

குறித்த கேள்விகளுக்கான பதில்களை எதிர்வரும் 15.06.2015 அன்று நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இன்றையதினம் ஒன்பது சந்தேக நபர்களும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.