தமிழ்மக்களின் இனப்படுகொலைக்கு தாமதமற்ற நீதி வேண்டும்
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் ‘தமிழ் இனத்தை நிர்மூலமாக்குவதற்கான’ திட்டமிட்ட மூலோபாயம் அரங்கேற்றப்பட்டது. தமிழ் மக்கள் இலங்கையில் எஞ்சியிருக்கக் கூடாது என்பதற்காக இவ்வாறானதொரு இனப்படுகொலை முயற்சி மிக இரகசியமாக மேற்கொள்ளப்பட்டது.
இலங்கையின் அபிவிருத்திக்காக பெரும்பான்மை சிங்களவர்கள் வழங்கிய பங்களிப்புக்கு இணையாக தமிழர்கள் பங்களிப்பு வழங்கியுள்ள போதிலும், கொலனித்துவத்திற்குப் பின்னான இலங்கையின் ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்ததுடன், இவர்களை மனிதர்கள் போல் நடத்துவதற்கு தவறியமையானது தமிழ் மக்கள் தமக்கான தனி ஈழத்தைப் பெற்றுக் கொள்வதற்கான போராட்டத்தை மேற்கொள்வதற்கு வழிவகுத்தது.
பின்னர் இந்தப் போராட்டமானது தமிழ் மக்கள் வகைதொகையின்றி இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது என்பது, ஏற்கனவே பதியப்பட்டுள்ள வரலாறாகும். தமிழ்மக்களைப் படுகொலை செய்வதை இலக்காகக் கொள்வதன் மூலம் மட்டுமே இனப்பிரச்சினையைத் தீர்வுக்குக் கொண்டுவர முடியும் என இலங்கை அரசாங்கமும் இராணுவமும் கருதின.
தற்போது இலங்கை என அழைக்கப்படும் சிலோன் பெப்ரவரி 04,1948ல் சுதந்திரமடைந்தது. 1972ல் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்ட போது, இந்நாடு தனது பெயரை ‘இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு’ எனப் பெயர் மாற்றம் செய்தது. இலங்கையின் பெரும்பான்மை மக்கள் சிங்கள சமூகத்தவர்களாவர். இவர்களில் பெரும்பான்மையான மக்கள் பௌத்த மதத்தைப் பின்பற்றுகிறார்கள். இதேவேளையில் இலங்கையின் சிறுபான்மை சமூகத்தில் அதிகளவான மக்களைக் கொண்ட தமிழர்களில் அதிகம் பேர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள்.
1980களில், சிங்களவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான இன முரண்பாடு ஆரம்பமாகியது. தமிழ் மக்கள் தொழில் வாய்ப்பைப் பெறுதல், கல்வி கற்றல் மற்றும் அரசியலில் பங்குபற்றுதல் போன்ற பல்வேறு செயற்பாடுகளில் சிங்களவர்களால் பாரபட்சப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாகவே இவ்விரு இனத்தவர்களுக்கும் இடையில் மோதல் ஆரம்பமாகியது. தமிழர்கள் பாரபட்சப்படுத்தப்பட்டமையால் சமமாக மதிக்கப்படாமை மற்றும் அபிவிருத்தி வீழ்ச்சி போன்றன ஏற்படக் காரணமாக அமைந்தன. இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர், கொலனித்துவ தொழில் வாய்ப்புக்களில் தமிழ் மக்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டதால் இவர்கள் மீது சிங்களவர்கள் தமது எதிர்ப்பைக் காண்பிப்பதற்கு வழிவகுத்தது.
இலங்கையில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் முடிவில் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டமைக்கு எதிராக இலங்கை இராணுவத்தினர் மீது தற்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை வாழ் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு எதிராக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக ஐ.நா விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமெரிக்கா தலைமையிலான நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
குற்றவாளிகளை இனங்கண்டு அவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்காக ஐ.நா விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் இதற்கு இலங்கை தனது ஆதரவை வழங்கவேண்டும் எனவும் மேற்குலக நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் 40,000 வரையான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐ.நா மதிப்பீடு செய்துள்ளது. பெருமளவான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மூன்று பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தம் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டது.
உள்நாட்டுப் போரானது 30 ஆண்டுகாலம் தொடரப்பட்டதுடன் இப்போர் முடிவடைந்து ஆறு ஆண்டுகளாகி விட்டன. எனினும், போர்க் குற்றவாளிகளைக் கைது செய்து தண்டனை வழங்குவதற்கான எந்தவொரு விசாரணைகளையும் இலங்கை அரசாங்கமோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ மேற்கொள்ளவில்லை.
அபிவிருத்தி என்பது தளம்பல் நிலையில் உள்ளது. இலங்கைத் தீவில் இன்னமும் செய்யவேண்டிய பல்வேறு பணிகள் காணப்படுகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் போர் பயனற்றதாக முடிவடைந்துள்ளது. 100,000 வரையான தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 200,000 இற்கும் மேற்பட்ட மக்கள் இப்போரில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இப்போர்க் குற்றங்களுடன் தொடர்புபட்ட குற்றவாளிகளைக் கைதுசெய்வதற்கான பரிந்துரை ஒன்றை ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்திருந்தது.
இலங்கைப் படையினர் திட்டமிட்ட முறையில் பொதுமக்கள், வைத்தியசாலைகள் மற்றும் உதவிப்பணியாளர்கள் போன்றோரைக் குறிவைத்துத் தாக்குதல்களை மேற்கொண்டதுடன், சரணடைந்த கைதிகளை மிகவும் மோசமான முறையில் படுகொலை செய்ததாகவும், பாலியல் வன்புணர்வுகளில் ஈடுபட்டதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுனர் குழுவால் அண்மையில் வெளியிடப்பட்ட ஆரம்ப கட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஜெனீவா சாசனங்களை மீறியுள்ளதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவை விட இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கையின் சிறுபான்மைத் தமிழ் மக்களுடன் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதில் ஆர்வமாக உள்ளார். மகிந்த ராஜபக்ச ஒரு கடும்போக்கு சிங்களத் தேசியவாதியாக நாட்டை ஆட்சி செய்தார். தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்ததன் மூலம் போர் வெற்றியை நிலைநாட்டிய மமதையுடன் இவர் ஆட்சிசெய்திருந்தார். இதனால் இவர் நாட்டில் வாழும் சிறுபான்மை இனங்களை மதித்து நல்லுறவைப் பேண முன்வரவில்லை. இவ்வாண்டின் ஆரம்பத்தில் நடாத்தப்பட்ட அதிபர் தேர்தலின் மூலம் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றார். இவர் தமிழ் மற்றும் முஸ்லீம் சிறுபான்மை சமூகத்தவர்களின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் பணியாற்றிய இலங்கை இராணுவத்தினர் இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற ஜனவரி – மே 2009 வரையான காலப்பகுதியில் பல்வேறு போர்க்குற்றங்களை மேற்கொண்டிருந்தன. இதேபோன்று தமிழ்ப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திப் பல்வேறு மீறல்களை மேற்கொண்டிருந்தனர்.
மே 18, 2009ல் வெள்ளை முள்ளிவாய்க்காலில் உள்நாட்டுப் போர் இறுதிக்கட்டத்தை அடைந்தது. இதற்கு மறுநாள் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடலம் கண்டெடுக்கப்பட்டது. ஜனவரி தொடக்கம் மே 2009 வரையான காலப்பகுதியில் குறைந்தது 7,934 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் 550 வரையான சிறார்களும் உள்ளடங்குவர். இவர்கள் 10 வயதிற்கும் குறைவான சிறார்களாவர். ஆனால் இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகமாகவே இருக்கும். இது தொடர்பில் எத்தரப்பும் பொறுப்பேற்கவில்லை. பதிலாக, இலங்கை அரசாங்கம் இவ்வாறான குற்றங்களைத் தனது படையினர் மேற்கொள்ளவில்லை எனக் கூறிவந்துள்ளது.
1983ல் தமிழ்ப் புலிகள் என அறியப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் முதன் முதலாக சிறிலங்காப் படைகள் மீது தாக்குதலை மேற்கொண்டன. இதுவே ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பமாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கை இணைத்ததாக சுதந்திர தமிழீழத்தை அமைப்பதே தமிழ்ப் புலிகளின் இலக்காகும். இலங்கை இராணுவத்திற்கு இந்திய அமைதி காக்கும் படையும் தனது ஆதரவை வழங்கியிருந்தது. 2002ல் இவ்விரு தரப்புக்களும் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. ஆனால் சமாதானம் நிலைபெறவில்லை.
மீண்டும் 2005ல் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இப்போரானது பின்னர் தீவிரம் பெற்று 2009 மேயில் இலங்கைப் படையினரால் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரே முடிவுக்கு வந்தது. தமிழ்ப் புலிகளுடன் தொடர்புபட்ட அரசியல் பிரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தற்போது சுதந்திர தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு, ஒன்றுபட்ட இலங்கைக்குக் கீழ் தமிழ் மக்களுக்குச் சாதகமான தீர்வொன்றை முன்வைக்குமாறு கோருகின்றது.
1983 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியானது இலங்கையின் உள்நாட்டுப் போர் இடம்பெற்ற காலமாகும். கிட்டத்தட்ட 100,000 வரையான மக்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் பல ஆயிரக்கணக்கான மக்கள் உள்நாட்டிற்குள் அல்லது அயல்நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வாழ்ந்ததாகவும் ஐ.நா மதிப்பிட்டுள்ளது.
போரில் பங்கு கொண்ட இரண்டு தரப்பினர்களும் பல்வேறு குற்றங்களை இழைத்துள்ளனர். இலங்கை இராணுவத்தினர், காவற்துறையினர் மற்றும் பொதுமக்களை இலக்கு வைத்து தமிழ்ப் புலிகள் தாக்குதல்களை மேற்கொண்டனர். பதுங்கித் தாக்குதல், தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் உட்பட புலிகள் அமைப்பு பல்வேறு போரியல் தந்திரோபாயங்களைப் பின்பற்றின.
சிங்கள அரசாங்கத்தால் தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் இன்னமும் தொடர்கின்றன. இதனால் தமிழ் மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். இலங்கை அரசாங்கமானது தொடர்ச்சியாக காணாமற்போதல்கள், பலவந்தக் கைதுகள், தாக்குதல்கள் மற்றும் சித்திரவதைகள், தமிழ் ஊடகவியலார்கள் மீதான தாக்குதல்கள் எனப் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றன. இவ்வாறான மனித உரிமை மீறல்கள் காரணமாக புகலிடத் தஞ்சம் கோரும் தமிழ் மக்களை மீண்டும் சிறிலங்காவுக்கு அனுப்ப வேண்டாம் என பிரித்தானிய அரசாங்கத்திடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.
போரின் போது இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியமை தொடர்பில் அனைத்துலக சமூகம் சிறிலங்கா மீது குற்றம்சுமத்தியிருந்தது. போரில் அகப்பட்டுத் தவித்த மக்களுக்கான உணவு, மருந்து போன்றவற்றை வழங்குவதற்கு அனைத்துலக தொண்டர் அமைப்புக்களுக்குத் தடை விதிக்கப்பட்டன.
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் றோம் உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திடவில்லை. போரின் போதான படுகொலைகளுக்கு இதுவரையில் பொறுப்புக் கூறப்படவில்லை. இலங்கை வாழ் சமூகங்களின் மத்தியில் நிலையான சமாதானம் ஏற்படுத்தப்படவில்லை. இதனை ஐ.நா வல்லுனர்களான டெஸ்மன்ட் ருற்று மற்றும் மேரி றொபின்சன் ஆகியோர் தமது அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளனர். போரில் பங்கு கொண்ட இரு தரப்புக்களாலும் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். போர்க் குற்றங்களை மேற்கொண்டவர்களைக் கைதுசெய்து தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். எனினும், இதற்கான காலம் கடந்து விட்டதாயினும், இன்னமும் காலந் தாழ்த்தாது தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இலங்கையின் தற்போதைய அரசாங்கம் இதற்கான ஈடுபாட்டைக் காண்பிக்க வேண்டும்.
தமது உறவுகளை இழந்து தவிக்கும் தமிழ் மக்கள் அண்மையில் ஆறாவது ஆண்டு போர் நிறைவு நாளின் போது தமது உறவுகளுக்காக நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற பிரதான நினைவேந்தல் நிகழ்வானது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. இவருடன் இணைந்து பல நூறு வரையான தமிழ் மக்கள் போரில் உயிர்நீத்த தமது உறவுகளை நினைத்து விளக்கேற்றினர்.
இவ்வாறான நினைவேந்தல் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படக் கூடாது என நீதிமன்றால் அறிவிக்கப்பட்ட போதிலும் போரில் கொல்லப்பட்ட மக்கள் நினைவுகூரப்பட்டனர். ஊர்வலங்களை மேற்கொள்வதற்கு மட்டுமே நீதிமன்றம் தடைவிதித்துள்ளதாக விக்னேஸ்வரன் தெரிவித்தார். நினைவேந்தல் நிகழ்வின் போது மக்கள் மத்தியில் உரையாற்றிய விக்னேஸ்வரன், தமிழ் பேசும் மக்களின் அரசியல் அவாக்கலைத் தீர்ப்பதற்கான தீர்மானத்தை முன்வைப்பதற்கு அனைத்துலக சமூகத்துடன் இணைந்து இலங்கை அரசாங்கம் முன்வரவேண்டும் என தெரிவித்தார்.
‘எமது மக்களின் ஒட்டுமொத்த மனித குலத்தாலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக முள்ளிவாய்க்கால் சம்பவம் அமைந்துள்ளது. முள்ளிவாய்க்காலில் போர் இறுதிக்கட்டத்தை அடைந்த போது இங்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இது சாட்சியமற்ற ஒரு யுத்தமாக முடிவடைந்தது’ என விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
தமிழ் மக்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வைக் கொண்டாடினர். இது ஒரு மிக முக்கிய தருணமாகக் காணப்படுகிறது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபிதயான மகிந்த ராஜபக்சவின் காலத்தில் இவ்வாறானதொரு நிகழ்வு மேற்கொள்ளப்பட்டால் அதனைப் பாதுகாப்புப் படையினர் குழப்பம் விளைவித்திருந்தனர். எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நினைவேந்தல் நிகழ்வை மேற்கொள்வதற்கான முயற்சிகள் எவராலும் மேற்கொள்ளப்படவில்லை என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் உட்பட தமிழர் வாழ்ந்த இடங்களில் 40,000 வரையான மக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐ.நா மதிப்பீடு சுட்டிக்காட்டுகிறது.
சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கான ‘அரசியற் தீர்வு’ என்பது நாட்டின் உறுதித்தன்மைக்கும் பாதுகாப்பிற்கும் முதன்மையானது என இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ‘நாடானது பாதுகாப்பானதாகவும் உறுதிமிக்கதாகவும் இருப்பதற்கு தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்’ என கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
வடக்கு மாகாணத்திற்கு அண்மையில் வருகை தந்திருந்த இலங்கைப் பிரதமர், நாட்டில் வாழும் இனங்களுக்கிடையில் மீளிணக்கப்பாட்டைக் கொண்டு வருவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு கட்டமாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொதுமக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். தமிழ் சமூகம் முகங்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு அடிப்படை வசதிகளை வழங்குவதை நோக்காகக் கொண்டே தற்போது சிறிலங்கா அரசாங்கம் செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.
யாழ் குடாநாடு முழுமைக்கும் இலங்கை அரசாங்கம் மின்சாரம் மற்றும் சுத்தமான குடிநீர் போன்றவற்றை வழங்கும் எனவும் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளை ஊக்குவித்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு செயற்படுவதாகவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியது.
‘போர் முடிவடைந்து விட்டது. ஆனால் மக்கள் மத்தியில் ஒற்றுமை நிலைநாட்டப்படவில்லை. தமிழ் மக்கள் மீளிணக்கப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கான ஆர்வத்தைக் காண்பித்துள்ளனர். நாங்கள் அரசியற் தீர்வொன்றைக் காணவேண்டும். நாட்டில் சமாதானம் மற்றும் உறுதிப்பாட்டை நிலைநாட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்’ என பிரதமர் சுட்டிக்காட்டியிருந்தார்.
யாழ் குடாநாடு முழுமைக்கும் தூய குடிநீரை வழங்குவதற்கான பாரிய திட்டம் ஒன்றை அமுல்படுத்துவதாக பிரதமர் வாக்குறுதியளித்துள்ளார். போரின் போது அழிவடைந்த தொழிற்சாலைகளை மீளவும் ஆரம்பித்து உள்ளுர் மக்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குவதாகவும் வாக்குறுதி வழங்கியுள்ளார். இதன்பிரகாரம், காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்புத் தொழிற்சாலை மற்றும் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
மக்கள் மத்தியில் நிலவும் சட்டப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு 400 இளைஞர்கள் காவற்துறையில் சேர்க்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். இதேவேளையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது கூட்டாளிகள் சிறிசேன அரசாங்கம் மீது பல்வேறு அழுத்தங்களை முன்வைக்கின்றனர். அதாவது போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொண்டு நீதியை நிலைநிறுத்துவதற்கும், ஐ.நா ஆதரவு விசாரணையை முன்னெடுப்பதற்கும் தடைவிதிக்கின்றன. இவர்கள் சிறிலங்காவிலும் தமிழ் நாட்டிலும் வாழும் தமிழ் மக்கள் மீது செல்வாக்குச் செலுத்த முயற்சிக்கின்றனர். இவ்வாறான காரணங்களால் மீண்டும் தாம் அடக்கப்படுவோமோ எனத் தமிழ் மக்கள் அச்சங்கொள்கின்றனர்.
போர் இடம்பெற்ற இலங்கையில் வீடுகளைப் புனரமைத்தல் மற்றும் தொடருந்துப் பாதைகளைப் புனரமைத்தல் போன்ற பல்வேறு அபிவிருத்திப் பணிகளில் இந்திய மத்திய அரசாங்கம் ஈடுபடுகிறது. எனினும், இலங்கைஅரசாங்கம் போர்க் குற்றவாளிகளைத் தண்டித்து நீதியை வழங்காது காலத்தை இழுத்தடிக்கும் தந்திரோபாயத்தைப் பின்பற்றுவதாகக் குற்றம் சுமத்தி உலக நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான பணிகளில் புலம்பெயர் தமிழ் மக்கள் ஈடுபடுகின்றனர்.
தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களைக் கண்டித்து இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கோருகின்றனர். இவ்வாறான கோரிக்கையை முன்வைத்து திராவிட முன்னேற்றக் கழகமானது இந்திய மத்திய அரசாங்கத்திலிருந்து விலகிக்கொண்டது.
தமிழ் மக்கள் மீதான போர்க் குற்றங்களைப் புரிந்தவர்களுக்கு நீதி வழங்கக் கோரி தமிழ்நாட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்கின்றனர். போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனையை வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் இலங்கையில் இவ்வாறானதொரு மீறல்கள் இடம்பெறமாட்டாது என்பது உறுதிப்படுத்தப்படும்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் ‘தமிழ் இனத்தை நிர்மூலமாக்குவதற்கான’ திட்டமிட்ட மூலோபாயம் அரங்கேற்றப்பட்டது. தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் மக்கள் இலங்கையில் எஞ்சியிருக்கக் கூடாது என்பதற்காக இவ்வாறானதொரு இனப்படுகொலை முயற்சி மிக இரகசியமாக மேற்கொள்ளப்பட்டது.
இனப்படுகொலைக் கண்காணிப்பகத்தால் வரையப்பட்டுள்ள இனப்படுகொலையின் எட்டு நிலைகளில் இலங்கையானது ஐந்தாவது நிலையில் காணப்படுகிறது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களையும் இறுதி மாதங்களில் இலங்கை அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பான ஐ.நா விசாரணைகளையும் இனப்படுகொலைக் கண்காணிப்பகம் ஆதரிக்கிறது.
தமிழ் மக்களுக்கு எதிரான மீறல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான ஐ.நா விசாரணைக்கு சிறிசேன அரசாங்கம் தனது ஒத்துழைப்பை வழங்கவேண்டும் எனவும் இதன்மூலம் தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் ஐ.நா கோரியுள்ளது.
இலங்கை வாழ் தமிழ் மக்களும் தமிழ்நாட்டில் வாழும் தமிழ் மக்களும் அனைத்துலக சமூகம் சார்பாக ஐ.நாவும் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றன. தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி சிறிசேனவால் நீதி வழங்கப்படும் என அனைத்துலக சமூகம் காத்திருக்கிறது. இந்த விடயத்தில் தாமதம் ஏற்படாது மிக விரைவாக குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இதுவரையில் கவனத்திற் கொண்டு வரப்படாத போர்க்குற்றங்கள், குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். காலந் தாழ்த்திய நீதியானது மறுக்கப்பட்ட நீதியாகவே அமையும் என்பதை நினைவிற் கொள்ளவும்.
– கலாநிதி அப்துல் ருப்