Breaking News

கே.பி.யை நாம் பாதுகாக்கத் தேவையில்லை! விசாரணை நடைபெறுகின்றது: வெளிவிவகார அமைச்சு

விடுதலைப் புலிகளின் நிதிக் கட்டமைப்புக்களை முற்று முழுதாக முடக்கும் முயற்சியாக கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனின் செயற்பாடுகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெறுவதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. கே.பி. நாடடைவிட்டு வெளியேறுவதற்கு பெப்ரவரியில் தடைவிதிக்கப்பட்டது எனவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வெளிநாடுகளிலுள்ள எமது புலனாய்வுக் கட்டமைப்புக்களுடன் அரசாங்கம் தொடர்புகளைத் தீவிரப்படுத்திவருகின்றது. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பாக இந்தக் கட்டமைப்புக்களிடமிருந்து அதிகமான தகவல்கள் இப்போது கிடைத்துக்கொண்டுள்ளது.

கிளிநொச்சியில் கே.பி. வசிப்பதற்கு முன்னைய அரசாங்கம் அனுமதியளித்திருந்தது. அகதிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான தொண்டர் அமைப்பு ஒன்றை நடத்துவதற்கும் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச ரீதியாக உள்ள சொத்துக்கள் குறித்த தகவல்களை இவர் வைத்திருப்பதாக நம்பப்படுகின்றது. இந்த நிலையில் அரசாங்கம் எதற்காக அவரைப் பாதுகாக்க வேண்டும்? அனைவற்றுக்கும் மேலாக விடுதலைப் புலிகளின் நிதிக்கட்டமைப்பு தொடர்ந்தும் இயங்கிவருவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னைய அரசாங்கம் அவரை எதற்காகப் பாதுகாத்தது?

எமது அரசாங்கம் பதவிக்கு வந்தபின்னர் நாட்டைவிட்டு வெளியேறமுடியாது கே.பி.யை தடை செய்தது. அவருடைய செயற்பாடுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றோம். அதனால், விடுதலைப் புலிகளின் நிதிச் செயற்பாடுகள் அனைத்தையும் எம்மால் முடக்கிவிட முடியும்” எனவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருக்கின்றார்.