இலஞ்ச வழக்கில் சந்திரபாபு நாயுடு தப்ப முடியாது - சந்திரசேகர ராவ் ஆவேசம்
இலஞ்ச வழக்கில் இருந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தப்ப முடியாது என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வாக்குக்கு கோடிகள் கொடுத்த இலஞ்ச வழக்கை திசை திருப்ப முயற்சித்து வருகிறார். இந்த வழக்கில் சட்டத்துக்கு அப்பாற்பட்டு எந்த காரியத்தையும் இந்த சந்திரசேகர ராவ் செய்யமாட்டான். சட்டப்படிதான் அனைத்து விசாரணைகளும் நடைபெறுகின்றன. இந்த பிரச்சினையை இரு மாநில பிரச்சினை போல் சந்திரபாபு நாயுடு சித்தரிக்க பார்க்கிறார்.
எனது ஓராண்டு ஆட்சியில் தெலுங்கானாவில் உள்ள ஆந்திர மக்கள் தாக்கப்பட்டதாக எந்த முறைப்பாடும் இல்லை. ஆந்திரா–தெலுங்கானா மக்கள் அண்ணன் தம்பிகளாக பழகி வருகிறார்கள். அவர்களுக்கிடையே பிரச்சினையை ஏற்படுத்த சந்திரபாபு நாயுடு முயற்சிக்கிறார்.
இலஞ்ச வழக்கில் இருந்து சந்திரபாபு நாயுடுவினால் தப்பிக்க முடியாது. அவரை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு காப்பாற்ற முயற்சி செய்யாது. ஏனெனில் ஊழலற்ற ஆட்சியை அமைப்பேன் என்று கூறித்தான் மோடி ஆட்சியை பிடித்தார். அதனால் ஊழல் பிரச்சினையில் சிக்கியுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு மோடி ஆதரவளிப்பார் என்று நான் கருதவில்லை என்றார்.








