டெஸ்டிலிருந்து சங்ககார ஓய்வு! இன்னும் முடிவு எடுக்கவில்லையாம்!
இலங்கை அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் குமார் சங்ககார டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் முடிவை இன்னும் எடுக்கவில்லை.
அவர் அணித் தெரிவாளர்களுடன் இது குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறார் என இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச ஒருநாள், ருவென்ரி-20 போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்ட குமார் சங்ககார தற்போது இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சங்ககார ஓய்வு பெறுவார் என செய்திகள் வெளி வந்துள்ள நிலையிலேயே "சங்ககார ஓய்வு முடிவை இன்னமும் எடுக்கவில்லை. அவர் அணித் தெரிவாளர்களுடன் பேசி வருகிறார் என அணித் தலைவர் மத்தியூஸ் தெரிவித்திருக்கிறார்.
டெஸ்ட் போட்டிகளில் 12,271 ஓட்டங்களைக் குவித்துள்ள குமார் சங்ககார 38 சதங்களைப் பெற்றுள்ளார். 11 இரட்டைச் சதங்களைப் பெற்றிருக்கும் சங்ககார ஆஸ்திரேலியாவின் டொன் பிரட்மனின் 12 இரட்டைச் சதங்கள் சாதனையை சமப்படுத்த இன்னமும் ஒரு இரட்டைச் சதமே தேவை என்பது குறிப்பிடத்தக்கது.








