ஊழல்களை மூடிமறைப்பதற்கு புலி மந்திரத்தை மீண்டும் கூறுகிறார் மஹிந்த - கபீர் ஹாசிம் விசனம்
முன்னாள் ஜனாதிபதியின் குற்றச்சாட்டின் படி தற்போதைய அரசாங்கத்தினால் 59 முகாம்கள் விடுவிக்கப்பட்டிருந்தால் அவை எந்த முகாம்கள் என்பதனை அவர் நாட்டு மக்களுக்கு உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷீம் சவால் விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னுடைய ஊழல்களை மூடிமறைப்பதற்காக மீளவும் புலி மந்திரத்தை ஜெபம் செய்ய ஆரம்பித்துள்ளார். எனினும் அடுத்த பாராளுமன்ற தேர்தலின் போது மஹிந்தவிற்கு இறுதி பாடம் புகட்டுவோம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாத்தறையில் நடைபெற்ற கூட்டத்திற்கு விடுத்திருந்த அறிக்கைக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிம் நேற்று ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
ஜனவரி 8 ஆம் திகதி மக்களின் புரட்சியினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். எனினும் மக்களினால் நிராகரிக்கப்பட்ட போதிலும் மாயையையும் வதந்தியையும் கொண்டு நாட்டை குழப்பத்திற்கு அவர் உள்ளாக்கி வருகிறார்.
நாட்டிலுள்ள விகாரை வாயிலாக சென்று நல்லாட்சிமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தை விமர்சனம் செய்து பிரபலமானவராக மக்கள் முன் அவதாரம் எடுப்பதற்கே அவர் இவ்வாறு செயற்பட்டுவருகிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாத்தறையில் நடைப்பெற்ற கூட்டத்தின் போது புலிகள் மீளவும் உருவாகப்போவதாகவும், வடக்கில் 59 இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இராணுவ வீரர்களுக்கு அகௌரவம் ஏற்படுத்தும் வகையில் அறிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மலர் மாலைகளை கையில் ஏந்திய வண்ணம் விகாரைகள் வாயிலாக சென்று இவ்வாறு செயற்படுவது கவலைக்குரியதாகும். தன்னுடைய ஊழல் ,மோசடிகளை முடிமறைப்பதற்காக மீளவும் புலி மந்திரத்தை ஜெபம் செய்ய தொடங்கியுள்ளார். ஊடகத்தின் வாயிலாக வதந்திகளை பரப்பி தற்காலிகமாக பிரதமர் கனவு கண்டு வருகிறார்.
எவ்வாறாயினும் வடக்கில் 59 இராணுவ முகாம்களை விடுவித்தது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஆவர். அதற்கு மாறாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் எந்த வொரு முகாம்களும் விடுவிக்கப்படவல்லை.
அதேபோன்று வடக்கில் 11 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவித்ததும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமேயாகும். புதிய அரசினால் 1000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டது. மேலும் சம்பூர் காணிகளையும் மஹிந்த ஆட்சியே விடுவித்தது.
முன்னாள் ஜனாதிபதியின் குற்றச்சாட்டின் பிரகாரம் தற்போதைய அரசாங்கத்தினால் 59 முகாம்கள் விடுவிக்கப்பட்டிருந்தால் அது எந்த முகாம் என்பதனை முன்னாள் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உடனடியாக வெ ளி ப்படுத்த வேண்டும்.
அரசாங்கம் விடுவித்த எந்தவொரு சவால்களுக்கும் அவர் உரிய வகையில் பதில் அளிப்பதற்கு முன்வரவில்லை. வீதி அபிவிருத்திக்காக தேசிய சேமிப்பு வங்கியினால் பெறப்பட்ட 55 பில்லியன் ரூபாவில் 28 பில்லியன் ரூபாவிற்கு என்ன நடந்தது என்பது இன்னும் இரகசியமாகவே உள்ளது.
எனவே அடுத்த பாராளுமன்ற தேர்தலின் போது மக்களினால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விற்கு இறுதி பாடம் புகுட்டுவோம் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்