புலிகளின் தேவைகளுக்காக எம்மை சிறைக்கூண்டுகளில் அடைக்கின்றார்கள் - மஹிந்த ஆதங்கம்
நான் யாழ்ப்பாணம் சென்றேன். கிழக்கு மாகாணம் சென்றேன். ஆனால் அங்கெல்லாம் எனக்கெதிராக கறுப்பு கொடிகள் பறக்கவிடப்படவில்லை.
ஆனால் பொலன்னறுவையில் எனக்கெதிராக கறுப்புக்கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. ஒரு சிலரின் தேவைக்காக மேற்கொள்ளப்பட்ட முட்டாள் தனமான செயல் இதுவாகும் எனத்தெரித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, புலிகளின் தேவைகளுக்காக எம்மை சிறைக்கூண்டுகளில் அடைக்கின்றார்கள் என்றும் கூறியுள்ளார்.
பொலன்னறுவை வெலிகந்த ஸ்ரீ சுதர்ஷன விஹாரையில் புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்திருப்பதாவது,
மக்கள் ஆணையில்லா ரணிலுக்கு முதுகெலும்பிருக்குமானால் சுயநம்பிக்கை இருக்குமானால் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்த வேண்டுமென சவால் விடுக்கின்றேன்.
நாட்டில் அனைத்து பிரதேசங்களிலும் வெள்ளைக்கொடிகள் பறந்த காலம் ஒன்றிருந்தது. அந்த யுகத்திற்கு 2009 ஆம் ஆண்டு நாம் முற்றுப்புள்ளி வைத்தோம். நான் யாழ்ப்பாணம் சென்றேன். கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்தேன். ஆனால் கறுப்புக்கொடிகள் பறக்க விடப்படவில்லை.
ஆனால் இன்று பொலன்னறுவையில் ஒரு சிலரின் தேவைகளுக்காக கறுப்பு கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. இவ்வாறான முட்டாள் தனமான செயல்களை மேற்கொள்ள வேண்டாம். கீழ்த்தரமான விதத்தில் இன்று நாம் பழிவாங்கப்படுகின்றோம். சேறு பூசுகிறார்கள். இவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டிருந்தேன்.
சர்வதேச நீதிமன்றங்களுக்கு எம்மை கொண்டு செல்வார்களாம். புலிகளின் தேவைகளுக்காக எம்மவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். நிதிக்குற்றவியல் பிரிவென அவர்களுக்கும் தேவையான விதத்தில் ஓர் பிரிவை ஏற்படுத்தி கொண்டு அவர்களுக்கு பிடிக்காதவர்களை விசாரிக்கிறார்கள். கைது செய்கிறார்கள்.
இந்த நிதிக்குற்றவியல் பிரிவு சட்ட ரீதியானதல்ல.உதவிகளை செய்தாலும் சமுர்த்தியை வழங்கினாலும் இது குற்றச்செயலாகவே நோக்கப்படுகின்றது. உலகில் அதிவேகமாக அபிவிருத்தியடைந்து வரும் நகரமாக கொழும்பு நகரை மாற்றியமைத்தோம். இது போன்று முழு நாட்டையும் அபிவிருத்தி செய்வதற்கு திட்டங்களை தயாரித்தோம்.
அம்பாந்தோட்டையில் துறைமுகத்தை அமைத்தோம் இன்று அது தனியாருக்கு வழங்கப்படவுள்ளதாம். பராக்கிரம சமுத்திரத்தில் துறைமுகத்தை ஏற்படுத்துகின்றார்கள். இன்று அங்கிருந்த படகையும் காணவில்லை. எம்மால் விகாரைகளுக்கு செல்ல முடியவில்லை. மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. நீர் விநியோகம் தடை செய்யப்படுகிறது. ஒரு சிலரின் தேவைகளுக்காக கறுப்பு கொடிகள் பறக்கவிடப்படுகின்றன.
பொலன்னறுவையில் விவசாயத்தலைவரொருவர் நாட்டில் தலைவரானபோது நாம் மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் இன்று மக்கள் ஆணையில்லாத ரணில் குழுவினரோடு இணைந்து எம்மை சிறையில் அடைத்து ஊழல் மோசடிக்காரர்கள் என்ற முத்திரை குத்துவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனை தொலைக்காட்சிகளில் பத்திரிகைகளில் விசேட செய்திகளில் காண்பிக்கப்படுகின்றது. இது தான் இன்றைய நல்லாட்சியா? நான் இன்று இந்த விகாரைக்கு விஜயம் செய்வதை தடுப்பதற்காக விகாரைகளுக்கு ரூபா 20 இலட்சம் வழங்க முன்வந்துள்ளோம். ஆனால் விகாராதிபதிகள் அதனை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டார்கள். அந்தளவிற்கு இந்த அரசாங்கம் என்னை கண்டு பயந்து போயுள்ளது.
எனவே உடனடியாக பாராளுமன்றத்தை கலைக்கவும் பொதுத்தேர்தலை நடத்தவும் இதற்கு முகம்கொடுப்பதற்கு எப்போதும் நாம் தயாராகவே உள்ளோம் என்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.