"உள்ளக விசாரணைப்பொறிமுறை அறிக்கை செப்டெம்பரில் சமர்ப்பிப்பு''
யுத்தக் குற்றம் தொடர்பாக நிறுவப்பட்டுள்ள உள்ளக பொறிமுறையின் கீழான அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் நேற்று வெள்ளிக்கிழமை அமர்வின் போது எதிர்க்கட்சி எம்.பி. யான பேராசிரியர் ஜி.எல். பிரீஸினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னதாக கேள்வி எழுப்பிய பீரிஸ் எம்.பி. உள்ளக விசாரணை எனும் பொறிமுறை தொடர்பிலான காலம் செப்டெம்பர் மாதத்தில் இறுதியாகின்றது. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடு எந்தளவில் இருக்கிறது எனக்கேட்டார்.
இதன்போது பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மேலும் கூறுகையில்
ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலின் பின்னர் ஏற்கனவே எம்மால் அறிவிக்கப்பட்டிருந்த 100 நாள் வேலைத்திட்டத்தின் 93 ஆம் பிரிவின் பிரகாரம் செயற்பட்டு நீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இதன் பிரகாரம் யுத்தக் குற்றம் தொடர்பில் நாம் உள்ளக விசாரணைப் பொறிமுறையொன்றை ஸ்தாபித்துள்ளோம். அதன் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
அத்துடன் நாம் உறுதியளித்தது போலவே எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் உள்ளக விசாரணைப் பொறி முறை தொடர்பான அறிக்கையினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்போம் என்றார்.