Breaking News

தட்டிக்கழிக்கபட்ட மணலாறு காணிப்பிணக்குகள்! முடிவின்றி முடிந்த நடமாடும் சேவை! (படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவு மாவட்டச்செயலகத்தில் நடைபெற் றுவரும் காணிப்பிணக்குகள் தீர்க்கும் நடமாடும் சேவையின் இரண்டாம் நாளான இன்று உள்வாங்கப் பட்டிருந்த முல்லை. கொக்குத் தொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுக்கேணி மக்களின் காணிப்பிணக்குகள் ஆணையக அதிகாரிகளால் தட்டிக்கழிக்கப் பட்டிருந்தது.

அக்காணிகள் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் தமக்கில்லை எனவும் அவை தொடர்பாக மகாவலி அபிவிருத்தி அதிகார சபையே தீர்வு வழங்கவேண்டும் என்ற மழுப்பலான பதிலை கூறியிருந்தனர்.

இது பற்றி காணிகளுக்குரித்தான மக்கள் தம்முடைய வேதனைகளை தன்னிடம் வெளிப்படுத்தியதாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய காணி தொடர்பான பிணக்குகள் யாவும் இரண்டு வருடங்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும். 

அதன் அடிப்படையில் பிரதேச செயலாளர் மாகாண காணி ஆணையாளர் போன்ற அதிகாரிகள் மட்டத்தில் தீர்க்கப்பட முடியாத காணிப்பிணக்குகளை தீர்க்கும் பொருட்டு நேற்றும் இன்றும் நடமாடும் சேவையொன்றானது காணி ஆணையாளர் நாயகம் தலைமையிலான உயர்மட்டக்குழுவினரால் நடாத்தப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு மாவட்டச்செயலகத்தில் நடைபெற்ற இந்நடமாடும் சேவையின் இரண்டாம் நாளாகிய இன்று 1984ம் ஆண்டில் வெளியேற்றப்பட்ட கொக்குத்தொடுவாய், கொக்கிளாய் மற்றும் கருநாட்டுக்கேணி மக்களின் வாழ்வாதார வயர் நிலம்சார் பிணக்கு முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தது.

1984இல் பகிரங்க அறிவித்தல் மூலம் இம்மக்கள் வெளியேற்றப்படும் வரை தமது வாழ்வாதாரத்துக்காக செய்கை பண்ணிவந்த 2307 ஏக்கருக்கு மேற்பட்ட வயல்காணிகள் 30 ஆண்டுகளின் பின் 2014இல் மக்கள் மீள்குடியேற்றப்பட்டபோது இம்மக்களின் வயல்நிலங்கள் மகாவலி அபிவிருத்தித்திட்ட B வலயம் என்ற பெயரில் சிங்கள மக்களுக்கு மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது.

இருந்த போதிலும் அரசினால் வழங்கப்பட்ட (1960 தொக்கம் 1984 வரை) இவ்வயல்நிலங்களுக்கான ஆவணங்கள் போர்ச்சூழ்நிலை காலங்களை கடந்த நிலையிலும் இன்றும் மக்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இன்றைய விசாரணைக்காக சுமார் 400க்கு மேற்பட்ட மக்கள் முல்லைத்தீவு கச்சேரிக்கு சமூகம் தந்திருந்தனர்.

இக்காணி தொடர்பான விசாரணைகளின் போது விசாரணைக்காக வந்த அதிகாரிகள் குழுவினர் இப்பிணக்கினை தட்டிக்கழிக்க முயன்றதை அவதானிக்க முடிந்தது. இக்காணிப்பிணக்கு தொடர்பாக மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் தமக்கு இதற்குரிய அதிகாரங்கள் இல்லை எனவும் உயரதிகாரிகள் கூறியதாக மக்கள் தெரிவித்தனர்.

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையை ஏன் இங்கு அழைக்கவில்லை எனக்கேள்விகேட்ட மக்கள் தம்மிடம் எஞ்சியிருந்த காணி அபிவிருத்தி கட்டளைச்சட்டப்படி வழங்கப்பட்ட உத்தரவுப்பத்திரங்களை காட்டி தங்களுடைய பெயரில் உள்ள காணியில் வயல்செய்ய முடியாதா எனக்கேட்டபோது அவர்களால் பதிலளிக்க முடியவில்லை.

1988இல் காணிகள் யாவும் மகாவலி அதிகார சபையால் பொறுப்பெடுக்கப்பட்டுவிட்டது என அவ்வதிகாரிகள் பின்னர் கூறியபோது அதற்கு தாம், 1984இல் தங்களை பகிரங்க அறிவித்தல் மூலம் வெளியேற்றிவிட்டு மக்கள் 

சூனியப்பகுதியாக இருந்த இந்தப்பிரதேசக்காணிகளை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை எவ்வாறு வேறு இன மக்களுக்கு வழங்கமுடியும்? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியதாக தெரிவித்தனர். ஈற்றில் 15 நாட்களுக்கு இது தொடர்பான சரியான அதிகாரிகள் குழு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு இப்பிணக்கு தீர்க்கப்படும் என நடமாடும் சேவை உயரதிகாரிகள் உறுதியளித்தனர். இவ் உறுதிப்படுத்தலை எழுத்து மூலமாக வழங்கும் படி பொதுமக்கள் கேட்டபொழுது அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர்.

அதன் பின்னர் மேற்படி மக்களின் காணிப்பிணக்குகளுக்கான உரிய தீர்வுகள் வழங்கப்படாத நிலையில் அவை காணி ஆணையாளர் நாயகத்தினால் அவை தீர்க்கப்படாத பிணக்குகளாகவே கருதப்படுமா என்ற கேள்வியை மக்கள் கேட்டபொழுது அதற்கும் அவர்கள் பதிலளிக்க மறுத்திருந்தனர்.

நடமாடும் சேவையில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஏனைய பிணக்குகளுக்கு உரிய அதிகாரிகளின் ஒப்பத்துடன் எழுத்துமூல ஆவணங்கள் வழங்கப்பட்டது. இதற்கு மட்டும் வழங்கப்படவில்லை. இதன்பின்னர் பொதுமக்கள் அதிகாரிகள் குறிப்பிட்டது போல் 15 நாட்களுக்குள் இதற்குரிய தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் தொடர் உண்ணாவிரத நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று கூறிவிட்டு கலைந்து சென்றதாக என்னிடம் தெரிவித்தனர்.